வேகமாக குறையும் நீராதாரம் மின்வாரிய அணைகளில் நீர் எடுப்பு
வேகமாக குறையும் நீராதாரம் மின்வாரிய அணைகளில் நீர் எடுப்பு
ADDED : ஏப் 24, 2024 08:52 PM
சென்னை:கோடையால் நீராதாரம் குறைந்து வரும் நிலையில், மின்வாரிய அணைகளில் இருந்தும், நிலத்தடி நீரை அதிகளவில் எடுத்தும் குடிநீர் தேவையை தமிழக குடிநீர் வடிகால் வாரியம், சமாளித்து வருகிறது.
தமிழக குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக, சென்னையை தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 544 கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும், 220 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக நாள்தோறும் 5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பயன் பெறுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாகவும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், அணைகள் மட்டுமின்றி நிலத்தடி நீராதாரத்தையும், தமிழக குடிநீர் வடிகால் வாரியம் பயன்படுத்தி வருகிறது. கொளுத்தும் கோடை வெயில் காரணமாக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள ஆறுகள், ஏரிகள், அணைகள் உள்ளிட்டவற்றில் மேற்பரப்பு நீராதாரம் குறைந்துள்ளது. நிலத்தடிநீர் மட்டமும் பல மாவட்டங்களில் சரிந்து வருகிறது.
இதனால், கோவை, திருப்பூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு தலை துாக்கியுள்ளது. கோவை மாவட்டத்தில், ஆழியாறு, பவானி, பரம்பிக்குளம், சிறுவாணி, பில்லுார் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் வாயிலாக, போதுமான அளவில் குடிநீர் கிடைக்கவில்லை.
எனவே மாற்று ஏற்பாடாக அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து, அப்பர் பவானி உள்ளிட்ட மின்வாரிய அணைகளில் இருந்து நீரை பெறுகின்றனர். இதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் தேவையை காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக பூர்த்தி செய்வதற்கு திருச்சி மாவட்டம், மூவரசம்நல்லுாரில் இருந்து கூடுதல் குடிநீர் குழாயில் அனுப்பப்பட்டு வருகிறது.
குடிநீர் வடிகால் வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன்வாயிலாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் வாயிலாக நீர் எடுப்பது குறைந்துள்ளது. இருப்பினும், நிலைமையை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
எனவே, கிடைக்கும் நீரை சிக்கனமாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே, கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

