பவானிசாகர் அணையிலிருந்து 5ம் நனைப்புக்கு நீர் நிறுத்தம்
பவானிசாகர் அணையிலிருந்து 5ம் நனைப்புக்கு நீர் நிறுத்தம்
ADDED : ஏப் 03, 2024 01:30 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் மூலம், கீழ்பவானி பாசனப்பகுதியில் முதல் போகம், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் நிலம்; இரண்டாம் போகத்தில், 1 லட்சத்து, 3,500 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது.
விவசாயிகள் எதிர்ப்பு@@
இந்தாண்டு அணை நீர்மட்டம் குறைவு, மழையின்மைக்கு இடையே பழைய ஆயக்கட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போதே கீழ்பவானி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீர் வழங்கி விடுவோம், என அதிகாரிகள் உத்தரவாதம் தந்தனர்.
கீழ்பவானி, 2ம் போகத்துக்கு ஜன., 7ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஏப்., 30 வரை தண்ணீர் விட அறிவிக்கப்பட்டது. ஆனால், அணை நீர்மட்டம் குறைந்ததால், முறை வைத்தும், 5 நனைப்புக்கு மட்டும் தண்ணீர் விடவும் அரசு அறிவித்தது.
இந்நிலையில் நான்காம் நனைப்புக்கே, இரண்டு நாட்கள் தண்ணீர் விட முடியாமல் இன்று மாலை, 5:00 மணிக்கு தண்ணீர் நிறுத்தம் செய்கின்றனர். 5ம் நனைப்புக்கு தண்ணீர் திறக்க இயலாது என நீர்வளத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திட்டமிடல் இல்லை
இதுபற்றி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது:
கீழ்பவானி 2ம் போகத்தில் எள், நிலக்கடலை, அதிகமாகவும், வாழை, கரும்பு குறைவாகவும் சாகுபடி செய்திருப்பர். 5ம் நனைப்புக்கு தண்ணீரே தர முடியாது என்பது வருத்தமானது. பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகம், அரசின் முறையான திட்டமிடல் இல்லை என்பதை, இது வெளிப்படுத்துகிறது.
இதனால், 30,000 ஏக்கருக்கு மேல் எள், நிலக்கடலை முற்றிலும் பாதிக்கும். வாழை, கரும்புக்கு போர்வெல் மற்றும் பிற நீர் பயன்பாடு இருந்தாலும், போதிய அளவு தண்ணீர் வழங்க முடியாமல் உற்பத்தி குறையும்.
தண்ணீரை நிறுத்துவதாக தானாவே முன்வந்து அறிவிப்பு செய்யும் அரசு, தானாகவே முன்வந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான இழப்பீட்டையும் அறிவித்து, விரைவாக வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

