ADDED : ஜூலை 20, 2024 02:36 AM
சென்னை : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால், 90 அணைகளின் கையிருப்பு, 84 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது.
நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள், 224 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. இதில், மேட்டூர், முல்லைப் பெரியாறு, பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள் முக்கியமானவை. இவை, 198 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை.
தென்மேற்கு பருவமழையால், பல அணைகளுக்கு நீர் கிடைப்பது வழக்கம். தற்போது, பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கர்நாடகா, கேரளாவிலும் மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால், அங்கிருந்தும் நீர்வரத்து கிடைப்பதால், அணைகளின் நீர் கையிருப்பு மெல்ல உயர்ந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, 90 அணைகளின் கையிருப்பு, 84.7 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக சேலம் - மேட்டூர் அணையில், 21; ஈரோடு - பவானிசாகரில், 15.8; கோவை - பரம்பிக்குளத்தில், 5.26; சோலையாறு அணையில், 5.10 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது.

