வயநாடு நிலச்சரிவு பாதிப்பு எதிரொலி கூடலுாரில் எளிமையாக ஓணம் கொண்டாட முடிவு
வயநாடு நிலச்சரிவு பாதிப்பு எதிரொலி கூடலுாரில் எளிமையாக ஓணம் கொண்டாட முடிவு
ADDED : செப் 12, 2024 07:30 PM
கூடலுார்:கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை, கேரளா மட்டுமின்றி, மலையாள மொழி பேசக் கூடிய மக்கள் வசிக்கும், தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஜூலை, 30ம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, மேப்பாடு, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
அதனால், ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை கேரள மாநில சுற்றுலாத்துறை ரத்து செய்து, வீடுகளில் ஓணம் பண்டிகை எளிமையாக கொண்டாடவும், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்யவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில், வயநாடு மாவட்டத்தை ஒட்டிய, நீலகிரி மாவட்டம், கூடலுாரில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள், பள்ளி, கல்லுாரி மற்றும் பொது இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை ரத்து செய்துள்ளனர்; வீடுகளில் எளிமையான முறையில் பண்டிகையை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், 'கூடலுாரில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பண்டிகையை எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்' என்றனர்.