ADDED : செப் 16, 2024 01:25 AM
திருச்சி விமான நிலையத்தில் நேற்று திருமாவளவன் அளித்த பேட்டி:
வி.சி.,க்கள் நடத்தவிருக்கும் மது ஒழிப்பு மாநாடு, சமூக பொறுப்பை உணர்ந்து முன்னெடுக்கும் மாநாடு; தேர்தல் அரசியலுக்கானது அல்ல.
கள்ளக்குறிச்சியிலும், மரக்காணத்திலும், கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை சந்தித்த போது, அவர்கள் கண்ணீர் மல்க முன்வைத்த ஒருமித்த கோரிக்கை, 'டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்' என்பது தான். அதற்காக மாநாடு நடத்தினால் தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல் என்று பிரச்னையை திசை திருப்புகின்றனர்.
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்பது, வி.சி., கட்சி தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த நாளிலிருந்து, கொள்கை முழக்கமாக இருந்து வருகிறது.
இந்த முழக்கத்தில் மாற்றம் இல்லை. மது ஒழிப்பு மாநாடு வாயிலாக யாரையும் மிரட்டவில்லை. மத்தியில், 1977 முதல் கூட்டணி ஆட்சி தான் நடக்கிறது. அதுபோல, மாநிலத்திலும் கோரிக்கை விடுப்பதில் தவறில்லை. அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது தான் உண்மையான ஜனநாயகம். கூட்டணி ஆட்சி வந்தால் மட்டுமே, எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

