எங்களால் ஆர்டர் மட்டும் தான் போட முடியும் ரியல் எஸ்டேட் ஆணையம் கைவிரிப்பு
எங்களால் ஆர்டர் மட்டும் தான் போட முடியும் ரியல் எஸ்டேட் ஆணையம் கைவிரிப்பு
ADDED : பிப் 27, 2025 12:12 AM
சென்னை:குறிப்பிட்ட காலத்தில், வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிப்பதில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தடுமாறுவதாக புகார் எழுந்து உள்ளது.
வீடு, மனை விற்பனையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், 2016ல் ஏற்படுத்தப் பட்டது.
இதற்காக, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 5,381 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் குடியிருப்பு திட்டங்களை, ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட திட்டங்களில், குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்கப்படாத நிலையில், பணம் செலுத்தியவர்கள், ஆணையத்தில் புகார் செய்யலாம்.
இந்த புகார்களை விசாரிக்கும் ஆணையம், அதற்கேற்ப உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் ஆணையத்தில் பதிவு செய்யாமல் வீடு விற்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
இத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டுமான நிறுவனங்கள் இழப்பீடு அளிக்கவும், ஆணையம் உத்தரவிடுகிறது.
ஆனால், இதில் பெரும்பாலான உத்தரவுகளை, கட்டுமான நிறுவனங்கள், பெயருக்குக்கூட மதிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, ஆணையத்தில் புகார் அளித்த மனுதாரர்கள் கூறியதாவது:
வீடு வாங்குவோரின் பாதுகாப்புக்காக, இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை அமல்படுத்தும் ஆணையம், ஒவ்வொரு பிரச்னைக்கும் உத்தரவு பிறப்பிக்கிறது.
ஆனால், இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வருவதற்கு யார் பொறுப்பு என்பது, இப்போது வரை தெளிவாகவில்லை.
இதுகுறித்து விசாரித்தால், எங்களால் உத்தரவு மட்டும்தான் பிறப்பிக்க முடியும் என, ஆணைய அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை தான் ஏற்படுகிறது.
ரியல் எஸ்டேட் சட்டத்தில், இதற்கான உரிய வழிமுறைகளை வகுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.