ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
UPDATED : பிப் 22, 2025 09:02 PM
ADDED : பிப் 22, 2025 08:59 PM
கடலுார்:எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல. இந்தி படிப்பதை எதிர்க்கவில்லை, திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம் என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கடலுார் மாவட்டம் வேப்பூரில், பள்ளிக் கல்வித்துறை, பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்திய 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' ஏழாவது மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழகத்தின் கல்வி தரத்தை மனதார பாராட்டியுள்ளனர். ஒருபக்கம் பாராட்டினாலும், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கின்றனர். மத்திய அரசு, தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய, 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை நிறுத்தி வைத்துள்ளனர்.
தேசிய கல்வி கொள்கை என்பது, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை; தமிழகத்திற்கு வேட்டு வைக்கும் கொள்கை. குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இக்கொள்கை ஆபத்தானது.
எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் அல்ல. ஆனால், எந்த மொழியை திணிக்க நினைத்தாலும், அந்த திணிப்பை எதிர்ப்போம். ஹிந்தியை திணிக்கின்றனர் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே, மத்திய அரசை நாம் எதிர்க்கவில்லை. மாணவர்களை பள்ளியிலிருந்து விரட்டும் கொள்கைதான் புதிய கல்விக் கொள்கை. அதனாலேயே அதை எதிர்க்கிறோம்.
சமூக நீதியை நீர்த்துப் போகச் செய்வதோடு, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தரும் உதவித் தொகையை மத்திய அரசு தர மறுக்கிறது. மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தி மாணவர்களை வடிகட்ட பார்க்கின்றனர். 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வருகிறது மத்திய அரசு.
விரும்பும் கல்லுாரி, பாடப் பிரிவில் சேர முடியாது. மருத்துவத்திற்கு நீட் தேர்வு போல பொறியியல், ஆர்ட்ஸ் படிக்க அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படும் என்கிறார்கள். ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வி என குலக்கல்வி திட்டத்தை அறிமுகம் செய்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்து தான், புதிய கல்விக் கொள்கையை வேண்டாம் என உறுதியாக சொல்கிறோம். இதை ஏற்று கையெழுத்திட்டால் தான் 2 ஆயிரம் கோடி கொடுப்போம் என்கின்றனர். 10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றாலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். இதில் கையெழுத்து போட்டால் 2 ஆயிரம் ஆண்டுகள் தமிழ் சமூகம் பின்னோக்கி போய்விடும். அந்த பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டோம்.
ஹிந்தியை திணிக்க நினைத்தால், 'தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு' என்பதை காண்பிப்போம். தமிழ் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1,488 கோடி ஒதுக்கிய மத்திய அரசு, எட்டு கோடி மக்கள் பேசும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி ரூ.74 கோடி. மத்திய அரசு நிதி வழங்காவிட்டாலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆசிரியர் மிரட்டலால் பரபரப்பு
கடலுார்
மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேரன், 59,
வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக
பணிபுரிகிறார். இவர் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்திடம்
கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முதல்வர்
ஸ்டாலின் பங்கேற்ற 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு நடைபெற்ற திருப்பயர்
அருகே உள்ள கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறி,
தற்கொலை மிரட்டல் விடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். போலீசார் சமாதானம்
செய்ததை அடுத்து, கீழே இறங்கினார்.