மணல் அள்ளுவதை போட்டு கொடுத்தால் மாதம் 1000 ரூபாய் தரமாட்டோம்! கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
மணல் அள்ளுவதை போட்டு கொடுத்தால் மாதம் 1000 ரூபாய் தரமாட்டோம்! கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
ADDED : ஜூலை 23, 2024 07:15 AM

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு குடமுருட்டி ஆற்றில், கண்டியூர் முதல் திருச்சோற்றுத்துறை வரை, கோணக்கடுங்கலார் பராமரிப்பு பணிக்காக மணல் அள்ளிக்கொள்ள வருவாய்த்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் கான்ட்ராக்டருக்கு அனுமதித்து உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் எந்த பயனும் இல்லை என தெரிவித்தனர். இந்நிலையில், கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம், குடமுருட்டி ஆறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து குடமுருட்டி ஆறு பாசன விவசாயிகள் சங்க செயலர் சீனிவாசன், நிருபர்களிடம் கூறியதாவது:
குடமுருட்டி ஆற்றில் இருந்து ரெட்டை கோவில், திருவேதுகுடி, ஆலங்குடி, கல்யாணி ஆகிய வாய்க்கால்கள் வாயிலாக, 2,500 ஏக்கர் பாசன வதி பெறுகிறது.இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் கோணக்கடுங்கலாறு தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக என கூறி, குடமுருட்டி ஆற்றில் மணலை எடுத்து வருவதால், வாய்க்காலை விட ஆறு பள்ளமாகி விட்டது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் வருவது சிரமமாக உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
நாங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டம் நடத்தினால் ஒரு மாதம் மணல் அள்ளுவதை நிறுத்துவர்; மீண்டும் மணல் அள்ளுவது தொடரும்.
பொதுமக்கள் எதிர்ப்பால் பகலில் அள்ளுவதை விட்டு, இரவில் அள்ளுகின்றனர். மேலும், கண்டியூர் பாலம் முதல் கிழக்கே, 400 மீட்டர் வரை ஆற்றின் தெற்கு பகுதியில் பாதை அமைத்து, மணல் அள்ளி வருகின்றனர். இது குறித்து எங்கள் கிராம பஞ்சாயத்து தலைவர் அதிகாரிகளிடம் மனு அளித்த போது, நிதியை நிறுத்தி விடுவோம் என மிரட்டினர்.
குறிப்பாக, மகளிர் உரிமை தொகை 1,000 ரூபாய், நுாறு நாள் பணிகள் கிடைக்காது என மிரட்டுகின்றனர். மிரட்டல் தொடர்கதையாகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

