ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கு நான்கு வாரங்கள் தள்ளிவைப்பு
ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கு நான்கு வாரங்கள் தள்ளிவைப்பு
ADDED : மார் 06, 2025 01:28 AM
சென்னை: செல்வ வரி வழக்கில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, வருமான வரித்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
கடந்த 1990 ம் ஆண்டு முதல் 2012 வரை, செல்வ வரி பாக்கியாக 10.12 கோடி; வருமான வரி பாக்கியாக 6.63 கோடி ரூபாய், ஜெயலலிதா செலுத்த வேண்டும் என, வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
செல்வ வரி மற்றும் வருமான வரி கணக்கு தொடர்பாக, ஜெயலலிதாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து, வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில், ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். அவருக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, வருமான வரித்துறை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையில், 2016 டிசம்பரில் ஜெயலலிதா காலமானார்.
வருமான வரித்துறை தாக்கல் செய்த, மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக்கை, எதிர்மனுதாரர்களாக சேர்க்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சி.சரவணன் அடங்கிய அமர்வு முன், இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா தரப்பில், 'செல்வ வரி ஆவணங்கள் பல வருமான வரித்துறையிடமே இல்லை. சில வழக்குகளில் ஜெயலலிதாவை விடுவித்ததை, வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது.
அது எந்தெந்த வழக்குகள்; வழக்கு தொடர்பான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே, இறுதி வாதத்தை முன் வைக்க முடியும்' என, தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, வருமான வரித்துறை தரப்பில், 'இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நகல்கள் எதிர்மனுதாரரான ஜெயலலிதா தரப்புக்கு, அப்போதே வழங்கப்பட்டது. பழைய ஆவணங்கள், தங்கள் வசம் இல்லை' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்களை பார்வையிடலாம்; அதன் அடிப்படையில் இறுதி வாதத்தை முன் வைக்கலாம்' எனக் கூறி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.