ADDED : ஜூலை 03, 2024 01:44 AM
சென்னை:நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, பதிவுத்துறை சீரமைத்துள்ளதை, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' சென்னை பிரிவு வரவேற்று உள்ளது.
கிரெடாய் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் திருத்தி அமைக்கப்பட்டு உள்ளன. ஜூலை 1ல் அமலுக்கு வந்துள்ள புதிய மதிப்புகளை வரவேற்கிறோம். வழிகாட்டி மதிப்புகளில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகளை சரி செய்ய, பதிவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுகிறோம்.
வழிகாட்டி மதிப்புகள், 10 சதவீதம் உயர்த்தப்பட்டதால், சில பகுதிகளில் கட்டுமான துறையினரும், பொது மக்களும் பிரச்னைகளை சந்திக்கலாம். இது, ரியல் எஸ்டேட் சந்தையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.