ADDED : ஆக 27, 2024 02:13 AM
சென்னை: 'பிரதமர் மோடி மனுத்தாக்கல் செய்ய அழைத்த போது, பழனிசாமி வர மறுத்ததாக, தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை அண்ணாமலை கூறியுள்ளார்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
அண்ணாமலை பா.ஜ., தலைவரானதும், கட்சிக்கு செலவு வைக்க மாட்டேன். என் செலவுகளை நானே பார்த்துக் கொள்வேன் என்று வீர வசனம் பேசினார்.
மாதந்தோறும் தன் குடும்ப செலவுகள், வீட்டு வாடகை, காருக்கான பெட்ரோல், உதவியாளர் மற்றும் பாதுகாவலர்களுக்கான சம்பளத்தை, நண்பர்கள் தருவதாகக் கூறினார். அவர்கள் பெயர்களை பட்டியலிட தயாரா? அண்ணாமலை ரிலீஸ் செய்த, 'தி.மு.க., பைல்ஸ்' என்னவாயிற்று?
அமைச்சர் தியாகராஜன் பேசியதாக வெளியிட்ட ஆடியோ, 30,000 கோடி ரூபாய் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு உட்பட பல விசாரணைகள், 'சைலன்ட் மோடு'க்கு மாறியதன் மர்மம் என்ன?
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் மோடி மனுத்தாக்கல் செய்ய அழைத்ததாகவும், பழனிசாமி செல்ல மறுத்ததாகவும், தார்ப்பாயில் வடிகட்டிய பொய்யை, அண்ணாமலை கூறியுள்ளார்.
பழனிசாமி குறித்து சில ஆண்டுகளாக, தி.மு.க.,வினர் கக்கி வந்த விஷத்தை, அவர்களின் புது கொள்ளை கூட்டாளி அண்ணாமலை கூறியுள்ளார். வரும், 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு நான்காம் இடம் கூட கிடைக்காது என்று கூறியுள்ளார். அ.தி.மு.க., தகுதியை மக்கள் தீர்மானிப்பர். லோக்சபா தேர்தலுக்கு முன், இந்த கட்சி வேறு ஒருவர் கைக்கு போய் விடும் என, ஆரூடம் சொன்னவர் தான் அண்ணாமலை.
அ.தி.மு.க.,வின் வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை, மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியுள்ளார். சித்தம் கலங்கியவர்களுக்கு என்ன பேசுகிறோம் எனத் தெரியாது. அவர்கள் பேசுவது மற்றவர்களுக்கும் புரியாது.
எந்த உழைப்பும் இல்லாமல், சொட்டு வியர்வை சிந்தாத அண்ணாமலை, முதல்வர் கனவில் சித்தம் கலங்கியுள்ளார். அவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
ஆக்டோபஸ் நஞ்சுக்கு மருந்து கிடையாது. அட்டைப்பூச்சி தன் எடையை காட்டிலும், 8 மடங்கு ரத்தத்தை உறிஞ்சும். அவற்றை போன்றுதான் அண்ணாமலையும் உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.