வன்னியர் இட ஒதுக்கீடுக்கு தடை விதித்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்: முதல்வர் கேள்வி
வன்னியர் இட ஒதுக்கீடுக்கு தடை விதித்த நிலையில் நாங்கள் என்ன செய்ய முடியும்: முதல்வர் கேள்வி
ADDED : டிச 10, 2024 11:41 PM
சென்னை:''வன்னியருக்கான, 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், நாங்கள் என்ன செய்வது,'' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ம.க., - ஜி.கே.மணி: மத்திய அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான், அனைவருக்கும் சமூக நீதியை உறுதி செய்ய முடியும்.
வன்னியருக்கான, 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக அரசும், முதல்வரும் மேற்கொண்ட நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தன. ஆனால், கடைசியில் கானல் நீராகி விட்டது; கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
அமைச்சர் மெய்யநாதன்: வன்னியர் உள் ஒதுக்கீட்டிற்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், தற்கால தரவுகளின் அடிப்படையில் தான் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தற்கால தரவுகள் வேண்டுமானால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்கான உரிமை மத்திய அரசிடமே உள்ளது.
மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே, வன்னியருக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.
கூட்டணி கட்சியான பா.ஜ.,விடம் பா.ம.க., இதை வலியுறுத்தினால், தமிழகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் சமூக நீதி கிடைக்கும்.
ஜி.கே.மணி: உள் ஒதுக்கீடு வழங்க ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என, அமைச்சர் கூறுகிறார்.
அப்படியெனில் முஸ்லிம்களுக்கும், அருந்ததியர்களுக்கும் எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது?
அமைச்சர் சிவசங்கர்: தேர்தலுக்காக அவசர கதியில் வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டத்தை, அ.தி.மு.க., அரசு கொண்டு வந்தது. சரியான புள்ளிவிபரங்களுடன் கொண்டு வரவில்லை என, உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின்: அ.தி.மு.க., ஆட்சியில், வன்னியருக்கான, 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு சட்டம் முறையாக கொண்டு வரப்படவில்லை.
ஆனாலும், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், வன்னியர் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தினோம், இதற்கிடையில் தான் உச்ச நீதிமன்றத்தில் அதற்கு தடை வாங்கப்பட்டுள்ளது. நாங்கள் என்ன செய்வது; யாருடைய தவறு இது?
இவ்வாறு விவாதம் நடந்தது.