என்னது, நடுவழியில் நிற்காதா? பஸ் சாவியுடன் பயணி டாட்டா! தூத்துக்குடியில் ஒரு கலாட்டா
என்னது, நடுவழியில் நிற்காதா? பஸ் சாவியுடன் பயணி டாட்டா! தூத்துக்குடியில் ஒரு கலாட்டா
ADDED : ஆக 31, 2024 12:32 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பஸ் நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலிக்கு ஒரு பஸ் புறப்பட்டது.
லட்சுமணன், 35, என்ற பயணி,வல்லநாடுக்கு டிக்கெட் கேட்டார்.
கண்டக்டர் இசக்கிதாஸ்: வல்லநாடில் பஸ் நிற்காது.
பயணி: ஏன் நிற்காது?
கண்டக்டர்: நேராக திருநெல்வேலி தான் போகும்; நடுவில் எங்கும் நிற்காது.
பயணி: இடையில் நிற்காமல் போவதற்கு இதென்ன பாயின்ட் டு பாயின்ட் பஸ்ஸா?
கண்டக்டர்: ஆமாம், பாயின்ட் டு பாயின்ட் பஸ் தான்.
பயணி: ஆனால் போர்டில் அப்படி இல்லை. எழுதவும் இல்லை. ஏறும்போது என்னிடம் சொல்லவும் இல்லை. நான் போக வேண்டிய இடம் வல்லநாடு. அதற்கு டிக்கெட் கொடுங்கள்.
கண்டக்டர்: பாயின்ட் டு பாயின்ட் பஸ் தான். ஒவ்வொருத்தருக்கும் தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. கீழே இறங்கு.
பயணி: சரி. பஸ் பெர்மிட்டை காட்டு. பாயின்ட் டு பாயின்ட் என்று அதில் போட்டிருந்தால் நானே இறங்கி விடுகிறேன். இல்லை என்றால் என்னை வல்லநாடில் இறக்கி விடு.
டிரைவர் பால்பாண்டி: இசக்கி, அவன் குடித்து விட்டு போதையில் தகராறு செய்கிறான். அவனிடம் எதுக்கு வாக்குவாதம்? வண்டியை ஸ்டேஷனில் நிருத்துகிறேன். அவனை போலீசில் ஒப்படைப்போம்.
இதையடுத்து, தென்பாகம் காவல் நிலையம் முன் பஸ்சை நிறுத்திய டிரைவர், லட்சுமணனை கீழே இறங்க சொன்னார். அவர் மறுத்தார். நீங்களே போய் போலீசை கூட்டிட்டு வாங்க. யார் பக்கம் நியாயம் என்பதை அவர்கள் சொல்லட்டும் என்றார்.
டிரைவரும் கண்டக்டரும் கீழே இறங்கி போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்றனர். பயணி உடனே பஸ்சின் சாவியை சட்டென உருவி எடுத்துக்கொண்டு கீழே இறங்கி நடையை கட்டினார்.
மற்ற பயணியர் அதிர்ச்சி அடைந்து கூப்பாடு போட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த போலீசார், பைக்கில் டிரைவர் கண்டக்டரை ஏற்றிக் கொண்டு லட்சுமணனை தேடி புறப்பட்டனர்.
மணிநகர் பகுதியில் சாவகாசமாக நடந்து போய் கொண்டிருந்த லட்சுமணனை பிடித்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சாவியை பறித்து, டிரைவரிடம் ஒப்படைத்தனர். பஸ் அரை மணி நேரம் தாமதமாக திருநெல்வேலிக்கு புறப்பட்டது.
போலீஸ்: குடித்து விட்டு பஸ்ஸில் தகராறு செய்யலாமா, லட்சுமணா?
லட்சுமணன்: சார், போதை ஏறினால்தான் மக்கள் நியாயம் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படி சொல்லாதீர்கள். அதனால் உங்களுக்கும் தேவையில்லாத பிரச்னை வரும். குடிக்காமல் இருந்தாலும் இதே நியாயத்தை கேட்டிருப்பேன்.
இதை கேட்ட போலீசார், லட்சுமணனை எச்சரிக்கையுடன் விட்டு விடலாம் என்ற முடிவை கைவிட்டு, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.