ADDED : ஜூலை 16, 2024 05:47 AM
சென்னை: தனியார் மருத்துவமனை யில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாட்களில் நடந்தது குறித்து, நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், காய்ச்சல் மற்றும் நீரிழப்பு சிகிச்சைக்காக, 2016 செப்., 22ல், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
டிசம்பர் 5ல் மரணம்அடைந்தார். சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களில் நிறைய முரண்பாடுகள் இருப்பதால், உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, அ.தி.மு.க.,வை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய முதல் அமர்வு இரு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

