பாகநேரி கிராமத்து குழந்தைகளுக்கு என்ன பிரச்னை? சோதனை செய்ய பரிந்துரை
பாகநேரி கிராமத்து குழந்தைகளுக்கு என்ன பிரச்னை? சோதனை செய்ய பரிந்துரை
ADDED : ஆக 15, 2024 12:26 AM
சென்னை:காரைக்குடி பகுதியில் பிறக்கும் குழந்தைகள், இரு மாதங்களுக்குள் சருமநோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால், அங்குள்ளவர்களுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதிக்குமாறு, தமிழக அரசிடம், ஹைதராபாத் உயிரணு மற்றும் மூலக்கூறு மையம் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், டாக்டர் எஸ்.பி.தியாகராஜன் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஹைதராபாத் உயிரணு மற்றும் மூலக்கூறு மையத்தின் அறிவியலாளர் தங்கராஜ் பேசியதாவது:
'எபிடர்மாலிசிஸ் புல்லோசா' என்ற அரிய வகை சரும நோயால், காரைக்குடி அருகே உள்ள பாகநேரி கிராமத்தில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளாகும் குழந்தைகள், பிறந்த இரண்டு மாதங்களுக்குள் உயிரிழக்கின்றனர். அத்தகைய பாதிப்பு, இதுவரை எட்டு குடும்பங்களில் கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த கிராமத்தில் மொத்தம், 5,000 பேர் உள்ளனர். அவர்களில், 4,000 பேர் குழந்தை பெறக்கூடிய வயதில் உள்ளவர்கள். அவர்கள் அனைவருக்கும் உரிய மரபணு பரிசோதனை நடத்தினால், பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். பாதிப்பு இருந்தால், முன்கூட்டியே அறிந்து கருவை கலைத்து விடலாம்.
இந்த பரிசோதனையை அனைவருக்கும் நடத்த, தமிழக அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். ஆறு முதல் 12 மாதங்களுக்குள், சோதனையை நடத்தி முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில், ராமச்சந்திரா உயிரி மருத்துவ அறிவியல் துறை தலைவர் சுதா வாரியர், ஆய்வு துறை தலைவர் கல்பனா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.