கள்ளுக்கடை திறப்பதில் என்ன பிரச்னை: கோவையில் அண்ணாமலை கேள்வி
கள்ளுக்கடை திறப்பதில் என்ன பிரச்னை: கோவையில் அண்ணாமலை கேள்வி
ADDED : ஜூலை 01, 2024 05:50 AM

கோவை: தமிழ்நாட்டில் 100 சதவீதம் கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும், என அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை பார்லிமென்ட் தொகுதி கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நீலாம்பூரில் நடந்தது. இதில் பங்கேற்க வந்த, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டசபையில், அமைச்சர் துரைமுருகன், நகைச்சுவையாக குறிப்பிட்டாலும், அவர் பேசியதில் உண்மை இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் நான் விசாரித்த போது, டாஸ்மாக் சரக்கின் தரம், தண்ணீரைப் போல தான் உள்ளது. சரியான விகிதத்தில் ஆல்கஹால் கலக்கப்படுவதில்லை; போதை அதிகம் வேண்டும் என்றால், கஞ்சா, அபின் கள்ளச்சாராயத்தை நோக்கி குடிகாரர்கள் திரும்பியுள்ளனர்.
'தமிழ்நாட்டின் டாஸ்மாக் வருமானம் வெளிப்படையாக இல்லை' என, சி.ஏ.ஜி., அறிக்கை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்திற்கு யார் சப்ளை செய்கிறார்கள் என்பது தெரியாது. அதற்கு தர நிர்ணயம் இல்லை. இதற்கும் தமிழக அரசுதான் பொறுப்பு.
மூத்த அமைச்சரே சட்டசபையில் உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அரசு செய்ய வேண்டிய வேலையை செய்யவில்லை; தவறாக செய்கிறது, என்பதை துரைமுருகன் சொல்லி இருக்கிறார்.
தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு இன்னும் சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. சட்டசபையில் அரசு அறிவிக்கும் என எதிர்பார்த்தும் நடக்கவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு முதலமைச்சர் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கொடுக்காமல், சென்று வருகிறார். வெளிநாடுகளுக்கு சென்று எவ்வளவு நிதி திரட்டி உள்ளார். துபாய், சிங்கப்பூர் சென்று கொண்டு வந்த முதலீட்டில் எவ்வளவு வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது என்பது தெரியவில்லை.
முதலமைச்சர் தொடர்ந்து, வெளிநாட்டு பயணம் செல்வதன் மர்மம் என்பது என்ன என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.
ஒரு வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்ய, இங்கு சட்டம், ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். அதிகார மையம் கூடாது. இவை இங்கு இல்லை.
டாஸ்மாக்கை படிப்படியாக குறைக்க வேண்டும். தமிழகத்தில் 100 சதவீதம் கள்ளுக்கடையை திறக்க வேண்டும். அதில் என்ன பிரச்னை என்பதை ஏன் சொல்வதில்லை. கள்ளு கடைகளை திறப்பதால், அந்நிய நாட்டு மதுபான விற்பனை குறையும். அதன் முதலாளிகளாக உள்ள தி.மு.க.,வினர் பாதிக்கப்படுவர்.
இலவச சைக்கிள் வாங்கும் துறை உதயநிதியிடம் உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் 400 ரூபாயிலிருந்து 600 ரூபாய் செலவு செய்தால் மட்டுமே, அந்த சைக்கிளை ஓட்ட முடியும். தரமற்ற சைக்கிள் வழங்கி உள்ளது உண்மைதான். சப்ளை செய்த நிறுவனத்தை 'பிளாக் லிஸ்ட்' செய்ய வேண்டும்.
இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.