நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வாக்குறுதி என்னாச்சு?
நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வாக்குறுதி என்னாச்சு?
ADDED : ஜூன் 22, 2024 01:40 AM
மதுரை:'நெல் குவிண்டாலுக்கு 2,320 ரூபாயாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பே தமிழக அரசு அறிவித்த 2,500 ரூபாய் திட்டத்தை தற்போது வரை செயல்படுத்தவில்லை' என, பாரதிய கிசான் சங்க விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2300, ரூ.2320 என அறிவித்தது.
ஆனால் மூன்றாண்டுகளுக்கு முன்பாக தி.மு.க., தனது தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 அளிப்பதாக வாக்குறுதி அளித்தும் தமிழக அரசு தற்போது வரை நிறைவேற்றாதது ஏமாற்றம் அளிப்பதாக சங்க தேசிய துணைத் தலைவர் பெருமாள் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
விவசாயிகளை காப்பாற்ற மற்ற மாநிலங்களில் வேளாண் விளைபொருட்களுக்கு ஓரளவு சரியான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000; சத்தீஸ்கரில் ரூ. 3100; ஒடிசாவில் ரூ.3100; கேரளாவில் ரூ.2900 வீதம் விவசாயிகளுக்கு நெல் கொள் முதல் மையங்களில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
விவசாய ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, இடுபொருள் செலவு அதிகமாவது காரணமாக விளைபொருளின் உற்பத்தி செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை ஈடு செய்யும் வகையில் விளைபொருள் விற்பனை விலையும் அதிகரித்தால் தான் விவசாயி தப்பிக்க முடியும்.
மத்திய அரசு சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.117 கூடுதலாக கொடுத்து குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2320 அறிவித்துள்ளது. எனவே தமிழக அரசு குவிண்டாலுக்கு ரூ.180 அதிகரித்தால் தான் மூன்றாண்டுகளுக்கு முன்பே சொன்னபடி குவிண்டாலுக்கு ரூ.2500 என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்றார்.

