தி.மலையில் 32 குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்ற என்ன நடவடிக்கை: ஐகோர்ட்
தி.மலையில் 32 குளங்கள் ஆக்கிரமிப்பு அகற்ற என்ன நடவடிக்கை: ஐகோர்ட்
ADDED : ஆக 06, 2024 01:04 AM
சென்னை:திருவண்ணாமலையில், 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், 'திருவண்ணாமலையில் உள்ள 138 குளங்களில், 32ல் ஆக்கிரமிப்புகள் உள்ளன; கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 'ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து, கலெக்டர், வருவாய் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், அறநிலையத்துறை இணை ஆணையர் ஆகியோர் கூட்டாக, மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்காவிட்டால், ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது தலைமைச் செயலர் தலைமையில், தனிப்பட்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் எனவும், முதல் பெஞ்ச் எச்சரித்தது. விசாரணையை, மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தது.