அமைச்சர் சொன்னது பொய்; அரசு டாக்டர்கள் எதிர்ப்பு
அமைச்சர் சொன்னது பொய்; அரசு டாக்டர்கள் எதிர்ப்பு
ADDED : செப் 10, 2024 03:42 AM

சென்னை: ''ஊதிய உயர்வு பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுத்தியதாக, அமைச்சர் சுப்பிரமணியன் தவறான தகவல் அளித்துள்ளார்,'' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:
அரசு டாக்டர்களின் ஊதிய கோரிக்கையை, இதுவரை நிறைவேற்றாத நிலையில், தீர்வு காணப்பட்டு விட்டதாக, தவறான தகவலை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அனைத்து டாக்டர்களும், அரசாணை 354ஐ அமல்படுத்த கோரி போராடி வந்தனர். ஆனால், யாரும் கேட்காத அரசாணை 293ஐ அமல்படுத்தி உள்ளனர்.
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, டாக்டர்களின் ஊதிய பிரச்னையில் தீர்வு காணப்பட்டு விட்டதாக, தவறான தகவல்களை கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு டாக்டர்கள் மற்றும் சட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க செயலர் ராமலிங்கம் கூறியதாவது:
அரசு டாக்டர்களின் கோரிக்கை பேச்சில், அரசாணை 293ஐ பயன்படுத்தி ஊதியப்படிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, இந்த அரசாணையில் பலன்கள் கிடைக்கவில்லை.
எனவே, அரசாணை 354ஐ மறு ஆய்வுக்கு உட்படுத்தி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கும் ஊதிய பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.