நகர்ப்புற வாரி।யம் அறிவித்த வீடுகள் ஒதுக்கீடு எப்போது?
நகர்ப்புற வாரி।யம் அறிவித்த வீடுகள் ஒதுக்கீடு எப்போது?
ADDED : ஏப் 09, 2024 12:06 AM
சென்னை: தமிழக அரசு அறிவித்தபடி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், 30,000 வீடுகள் எப்போது ஒதுக்கப்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாவட்டங்களில் ஏழை மக்களுக்காக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களுக்கு தேவையான நிதி மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெறப்படுகின்றன.
தமிழகத்தில் மாநில அரசின் வாயிலாகவும், மத்திய அரசின் நிதியை பயன்படுத்தியும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது. குடிசை பகுதி மக்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அவர்களுக்கான வீடு ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டங்களில், 2023 - 24ம் நிதி ஆண்டில், 30,000 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், 10,000 பேருக்கு கூட இன்னும் வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளன.
இதுகுறித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்ட திட்டங்கள், ஏற்கனவே கட்டுமான பணிகள் துவங்கிய திட்டங்களின் அடிப்படையில் தான், 30,000 பேருக்கு வீடு என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான வீடுகள் கட்டும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இதில், 60 சதவீதத்துக்கு மேல் ஒதுக்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.
ஆனால், கட்டுமான பொருட்கள் பற்றாக்குறை, திட்ட அனுமதி கிடைப்பதில் தாமதம், நிதி விடுவிப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் இந்த இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது. இதற்காக, நிலுவை திட்ட பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

