செலவுக்கு எங்கே போறது? :தொகுதி தலைவர், செயலர் பதவிக்கு ஆர்வம் காட்டாத பா.ம.க., நிர்வாகிகள்
செலவுக்கு எங்கே போறது? :தொகுதி தலைவர், செயலர் பதவிக்கு ஆர்வம் காட்டாத பா.ம.க., நிர்வாகிகள்
ADDED : செப் 14, 2024 09:01 PM
சென்னை:செலவு செய்ய முடியாது என்பதால், சட்டசபை தொகுதி தலைவர், செயலர் பதவிகளை பெற, பா.ம.க., நிர்வாகிகள் மறுப்பதாகவும், பொறுப்பைப் பெற ஆர்வம் இல்லாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2009 லோக்சபா தேர்தல் முதல், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பா.ம.க., அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. வரும் 2026 சட்டசபை தேர்தலில், மாநிலக் கட்சி அந்தஸ்தை பெறாவிட்டால், மாம்பழம் சின்னத்தையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.
கடந்த 2009க்குப் பின், மத்திய அமைச்சரவையில் பா.ம.க., இடம்பெறாததால், மாவட்ட செயலர்கள் கட்சிக்காக செலவு செய்வதை குறைத்து விட்டனர். இதனால் கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், மிகப்பெரிய அளவில் மாநில மாநாட்டை பா.ம.க.,வால் நடத்த முடியவில்லை.
இதையெல்லாம் உணர்ந்த கட்சி தலைமை, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் பா.ம.க.,வை பலப்படுத்த, 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலைவர், செயலர்கள் நியமிக்கப்படுவார்கள் என, கடந்த ஆக., 5ல் அறிவித்தது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ஒரு பெண் தலைவர், செயலர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவிப்பு வெளியானது. தொகுதி செயலர் பதவி என்பது மாவட்ட செயலருக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன்படி சட்டசபை தொகுதி தலைவர், செயலரை தேர்வு செய்ய, ஏழு குழுக்களை ராமதாஸ் அமைத்துள்ளார். அக்குழுவினர், மாநிலம் முழுதும் சென்று, நிர்வாகிகளை சந்தித்து, தகுதியானவர்களை தேடி வருகின்றனர்.
வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளை சந்தித்த பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு, ஷேக் மொய்தீன், பொன்மலை ஆகியோர் அடங்கிய குழுவினர், சமீபத்தில் ராமதாசை சந்தித்து, பரிந்துரை பட்டியலை அளித்தனர்.
ஆனால் ஒன்றரை மாதங்களாகியும், தொகுதி தலைவர், செயலர், மகளிரணி தலைவர், செயலரை தேர்வு செய்ய முடியாமல், கட்சி தலைமை தவித்து வருகிறது. இதனால் குழுவினரை, ராமதாஸ் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.
குழுவில் இடம்பெற்றுள்ள சிலரிடம் பேசியபோது, 'பா.ம.க., என்பது மாநிலம் முழுதும் வலிமையுடன் இருக்கும் கட்சி அல்ல. அதனால், 234 தொகுதிகளுக்கும் தலைவர், செயலரை நியமிப்பது கடினம்தான். முழுநேரமாக கட்சி பணியாற்ற வேண்டும்; அதற்கு அதிக பணம் தேவை என்பதால், விருப்பம் இருந்தும் பலரும், பதவியே வேண்டாம் என்கின்றனர். ஆர்வமும், திறனும் இருப்பவர்களால் தான், மக்களிடம் நிதி பெற்று கட்சியை நடத்த முடியும். அத்தகைய நபர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்' என்றனர்.