கோவனின் பாட்டும், சூர்யாவின் கர்ஜனையும் எங்கே? திரைத்துறையினர் மவுனம் குறித்து பலரும் கேள்வி
கோவனின் பாட்டும், சூர்யாவின் கர்ஜனையும் எங்கே? திரைத்துறையினர் மவுனம் குறித்து பலரும் கேள்வி
ADDED : ஜூன் 20, 2024 11:12 PM

சென்னை:தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியின் போது, மதுவிலக்கை
அமல்படுத்த வலியுறுத்தி குரல் கொடுத்த திரைத்துறையினர் உள்ளிட்டோர்,
தற்போது வாய்மூடி மவுனித்து இருப்பது ஏன் என்ற கேள்வியை, பல்வேறு
தரப்பினரும் எழுப்பி உள்ளனர்.
இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று,
முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற, 'ஹேஸ்டேக்'கின் கீழ்,
சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
l மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், தி.மு.க., சார்பில் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவை அனைத்தையும் மறந்து விட்டனர். டாஸ்மாக் கடைகளில், மதுபானங்களின் விலையை அதிகரித்ததுடன், விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்தனர்
l மதுபானங்கள், 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் கிடைக்கின்றன. இதுதவிர கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்துள்ளதை, கள்ளக்குறிச்சி சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது
l அ.தி.மு.க., ஆட்சியில், மதுவிலக்கை கொண்டுவர குரல் கொடுத்த, திரையுலக பிரமுகர்களான, கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சித்தார்த், அமீர், சமுத்திரக்கனி, சத்யராஜ் போன்றோர், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள், அவர்களை கலாய்த்து வருகின்றனர்
l உத்திர பிரதேசத்தில் மட்டும் கள்ளச்சாராய மரணம் நடந்திருந்தால், நடிகர்கள் பலரும் வாய் திறந்திருப்பர். தமிழகத்தில் என்பதால் அமைதியாகி விட்டனர் என, பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்
l மதுவிலக்கு கோரி புரட்சிகரமாக பாடிய, நாட்டுப்புற பாடகர் கோவன் எங்கே சென்றார் என்றும், சமூக வலைதளங்களில், பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இதே கேள்வியை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரும் எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை:
கள்ளச்சாராயத்தால் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், மருத்துவமனை துாண்களிலும், சாலைகளிலும், கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன. இத்தனைக்கு பிறகும், திரைத்துறையைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, ஒரு குரலும் வரவில்லை.
நடிகர் விஜய் மட்டும், தனக்கு வாய்ப்பளித்து வளர்த்து விட்ட தமிழர்களுக்கு இடர் நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து, குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றனர்.
ஏழை மக்கள், 200 ரூபாய் கொடுத்து, டிக்கெட் வாங்குவதால் தான், நீங்கள் 100, 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இதுபோன்ற நேரங்களில், ஆதரவு கொடுக்க வேண்டிய சமூகப் பொறுப்பு, அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையைச் சார்ந்தவர்களை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

