'ஹஜ் இல்லம்' அமைப்பது எங்கே? அமைச்சர் அன்பரசன் விளக்கம்!
'ஹஜ் இல்லம்' அமைப்பது எங்கே? அமைச்சர் அன்பரசன் விளக்கம்!
ADDED : மார் 08, 2025 12:36 AM

சென்னை:'சென்னை நங்கநல்லுாரில் ஹஜ் இல்லம் அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இது, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், ஆலந்துாரில் நடந்த கட்சி நிகழ்ச்சியில், அமைச்சரும், அத்தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன், ஹஜ் இல்லம் அமைவது குறித்து பேசியதாவது:
சில நாட்களுக்கு முன், முதல்வர் நாகப்பட்டினத்தில் பேசும்போது, 'நங்கநல்லுாரில், 63 கோடி ரூபாயில் ஹஜ் இல்லம் கட்டித் தரப்படும்' என்று அறிவித்தார்.
இதையடுத்து, நங்கநல்லுாரில் இருப்போர், 'பிராமணர்கள் அதிகம் வசிக்கும் நங்கநல்லுாரை, மற்றொரு திருவல்லிக்கேணியாக தி.மு.க.,வினர் உருவாக்குகின்றனர்' என, தகவல் பரப்ப ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், ஹஜ் இல்லம் கட்டுவதற்கு, நங்கநல்லுாரில் இடம் கொடுக்கப்படவில்லை.
ஜி.எஸ்.டி., மெயின் ரோட்டில், தனியார் பள்ளி அருகே அமைந்துள்ள கன்டோன்மென்டிற்கு சொந்தமான இடத்தில் அமைகிறது. அந்த இடம், நங்கநல்லுார் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி.
ஹஜ் இல்லம் முஸ்லிம்களின் வெகு நாள் கோரிக்கை. ஹஜ் பயணத்திற்கு செல்வோரை அங்கு தங்க வைத்து, விமானத்தில் ஏற்றி அனுப்ப வசதியாக இருக்கும். எனவே, அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.