ADDED : செப் 06, 2024 02:45 AM

8ம் வகுப்பு மாணவர்களுக்கு 3வது பாடம் படிக்க தெரியலை
சென்னை:''புதிய தேசிய கல்விக் கொள்கையின், 'பி.எம்.ஸ்ரீ' திட்டத்தால், மாணவர்களின் தரம் மேம்படும்,'' என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
தமிழக கவர்னர் ரவி, 300 ஆசிரியர்களுடன் கலந்துரையாடும், 'எண்ணித் துணிக' எனும் நிகழ்ச்சி, கிண்டி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. சிறந்த ஆசிரியர்களை கவுரவித்து, கவர்னர் ரவி பேசியதாவது:
சுதந்திரத்துக்கு முன், நம் பொருளாதாரமும், கல்வியும் சிறப்பாக இருந்தது. மாணவர்கள் குருகுல வழியில், ஆசிரியர்களிடம் இருந்து வாழ்வியலோடு சேர்ந்த கல்வியை கற்றனர். அவர்களின் வாழ்வில், சமூகப்பணி இணைந்தே இருந்தது. அவர்களும் சமூகப்பொறுப்புடன் இருந்ததால், சமூகம் அவர்களுடன் இருந்தது.
தற்போதைய கல்வியில், சமூகப்பணி என்பது மேற்கத்திய கலாசாரம் போல, ஒரு நாள் பணியாக கற்பிக்கப்படுகிறது. நம் கல்வித்தரத்தை முன்னேற்ற வேண்டிய தேவையை உணர்ந்து, நாடு முழுதும் உள்ள வல்லுனர்கள் கூடி, புதிய கல்வி கொள்கையை உருவாக்கினர். இதில், கல்வித்தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றன. சில மாநிலங்கள் மறுத்துள்ளன. தமிழகம் முதலில் ஏற்பதாக கையெழுத்திட்டது. தற்போது, அதில் உள்ள பலவற்றை ஏற்கமாட்டோம் என்கிறது.
பொதுவாக, பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் வாயிலாக, மேல்நிலை பள்ளிகளில், தரம் வாய்ந்த ஆய்வகங்களை கட்டமைக்க, மத்திய அரசு நிதி வழங்குகிறது. இதை பெற்ற மாநிலங்கள், மாணவர்களின் தரத்தை மேம்படுத்தி உள்ளன.
தமிழக கிராமங்களிலும் கல்வியை வளர்க்க, முன்னாள் முதல்வர் காமராஜர் அரசு பள்ளிகளை அதிகப்படுத்தினார். தற்போது, கல்வியின் இன்ஜின் எனக்கூறும் தமிழக அரசு பள்ளிகளில் 8, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 75 சதவீதம் பேருக்கு, மூன்றாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க, இரண்டிலக்க எண்களை அறிய முடியவில்லை. இதை மேம்படுத்தாவிட்டால், கல்வித்தரத்தை நாம் இழந்து விடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.