எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது? முதல்வர் தனிப்பிரிவு ஊழியர்கள் குமுறல்!
எங்கள் குறைகளை யாரிடம் சொல்வது? முதல்வர் தனிப்பிரிவு ஊழியர்கள் குமுறல்!
ADDED : மே 30, 2024 11:29 PM
சென்னை:'பொது மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, எங்கள் அலுவலகத்தில் மனு கொடுக்கின்றனர். நாங்கள் படும் சிரமங்களுக்கு யாரிடம் போய் மனு கொடுப்பது' என, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலக ஊழியர்கள் குமுறுகின்றனர்.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. தாலுகா, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகளிடம் மனு கொடுத்து, நடவடிக்கை எடுக்காத நிலையில், முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுத்தால், தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
நுாற்றுக்கணக்கானோர்
எனவே, மாநிலம் முழுதுமிருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். தனிப்பிரிவு ஊழியர்கள் மனுவை பெற்றுக்கொண்டு, அதற்கான சான்றை, எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்புகின்றனர்.
அதிலுள்ள பதிவு எண்ணை வைத்து, தங்கள் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எந்த துறையில் மனு உள்ளது என்ற விபரத்தை, இணையதளம் வாயிலாக அறிய முடியும்.
தனிப்பிரிவு ஊழியர்கள், தினமும் தங்களிடம் மக்கள் கொடுக்கும் மனுக்களை, கணினியில் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புகின்றனர்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுத்து, அந்த விபரத்தை அந்த துறையினர் தெரியப்படுத்துகின்றனர். அதன்பின், அந்த விபரம் மனுதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2021ல் முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறை தீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'முதல்வரின் முகவரி' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.
'ஆன்லைன்' வழியாக மனு அனுப்ப வசதி இருந்தாலும், நேரடியாக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் கொடுப்பதையே பலரும் விரும்புகின்றனர்.
ஆனால், இப்பிரிவில் 40 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருப்பதால், பணிகள் பாதிக்கப்படுவதாகவும், அதிக பணிச்சுமையால் அவதிப்படுவதாகவும் ஊழியர்கள் குமுறுகின்றனர்.
பணிச்சுமையால் தவறு
இது குறித்து, ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
பொது மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் வருகின்றனர். அங்கு பணிபுரியும் நாங்கள், யாரிடம் எங்கள் குறைகளை சொல்வது என்று தெரியவில்லை.
தனிப்பிரிவு அலுவலகத்தில், 65க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இவற்றில், பிரிவு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், தட்டச்சர், உதவியாளர், அலுவலக உதவியாளர் என, 25க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. பொது மக்கள் அளிக்கும் மனுக்களை, தட்டச்சர் இல்லாமல் கணினியில் பதிவு செய்வது சிரமமாக உள்ளது.
உதவிப்பிரிவு அலுவலர் பணியிடங்கள் மட்டும் 10 காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பணியில் உள்ளவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது.
இது தவிர, முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்ட பின், கூடுதல் பணி செய்ய வேண்டி உள்ளது. பணிச்சுமை காரணமாக தவறுகள் நடக்கின்றன. இதனால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.