ADDED : செப் 02, 2024 02:00 AM

சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், யாருடைய ஓட்டுகளை பிரிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளதால், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் குழப்பத்தில் உள்ளன.
தி.மு.க., தரப்பில், தமிழக உளவுத்துறை வாயிலாக சமீபத்தில் சர்வே ஒன்றை நடத்தி அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில், நடிகர் விஜய் 8 - 10 சதவீத ஓட்டுகளை பெறலாம் என்று சொல்லப்பட்டு உள்ளது.
அந்த ஓட்டுக்கள் அனைத்தும், தி.மு.க.,வுக்கும், அரசுக்கும் எதிரான ஓட்டுகள் என்றே கூறப்பட்டுள்ளது. இதை அறிந்ததும், தி.மு.க., தரப்புக்கு இருந்த கவலை போய் விட்டது.
அ.தி.மு.க., தலைமையோ, இந்தக் கருத்தை ஏற்க மறுக்கிறது. ஆளுங் கட்சி ஆதரவு ஓட்டுகளை, இதுவரை எந்த கட்சியாலும் பிரிக்க முடியாத நிலை இருந்தது. அரசியலுக்கு புதிய முகமாக விஜய் வருவதால், தி.மு.க., மற்றும் அரசுக்கு ஆதரவான ஓட்டுகளையே அவர் பிரிப்பார் என்று அக்கட்சி கருதுகிறது.
ஆளும் தி.மு.க.,வின் கொள்கைகளையே அப்படியே பிரதிபலிக்கும் விதமாக, விஜய் கட்சியின் அரசியல் அணுகுமுறைகள் உள்ளன. அதையொட்டியே அவரது அரசியல் பயணமும் இருக்கும் என்பதால், ஆளுங்கட்சியின் ஆதரவு ஓட்டுகளையே, விஜய் கணிசமாக பிரிக்கக்கூடும் என்றே அரசியல் வட்டாரத்தில் கணிக்கப்படுகிறது.
இது நடக்கும்பட்சத்தில், ஆளும் கூட்டணி பலம் இழக்கும். அந்த நேரத்தில், ஆளுங்கட்சியின் எதிர்ப்பு ஓட்டுகளை மொத்தமாக அறுவடை செய்து விட்டால், ஆட்சி வசப்படும் என்பது பழனிசாமியின் கணக்கு.
விஜய்க்கு எதிராக அரசியல் செய்வதன் வாயிலாகவே, தி.மு.க., எதிர்ப்பு ஓட்டுகளை மடைமாற்ற முடியும் என திட்டமிடும் பழனிசாமி, அவருக்கு எதிராக திரும்புமாறு, தன் கட்சியினருக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறார்.
தி.மு.க.,வை எப்படி கடுமையாக விமர்சிக்கிறோமோ, அதற்கு சற்றும் குறையாமல் விஜயை விமர்சிக்குமாறு, கட்சியினரை உசுப்பி விட்டுள்ளார்.
விஜயோடு இணைந்து சட்டசபை தேர்தலை சந்திக்கலாமா என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், துவக்கத்தில் ஆசைப்பட்டார்.
அவரோடு கூட்டு வைத்தால், தன் கட்சி கரைந்து விடும் என்பதால், அந்த ஆசையை துறந்து விட்டார். விஜய் பக்கம் யாரும் போகாமல் இருக்கவும், தன் ஆதரவு ஓட்டுகளை தக்கவைக்கவும், தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார்
- நமது நிருபர் -.