சாம்சங் பிரச்னையை 'அணைய' விடாமல் பாதுகாப்பது யார்?
சாம்சங் பிரச்னையை 'அணைய' விடாமல் பாதுகாப்பது யார்?
ADDED : பிப் 22, 2025 11:37 PM
சென்னை:சாம்சங் பணியாளர்கள் பிரச்னையில், விரைவாக தீர்வு காணுமாறு, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது.
இந்த ஆலையில், கடந்த ஆண்டு தொடர் போராட்டத்தில் பங்கேற்ற பணியாளர்களுக்கு நெருக்கடி அளிப்பதாகக் கூறி, ஆலையின் நிர்வாக இயக்குநரை சந்திக்க அனுமதி கேட்ட மூன்று பேரை, சாம்சங் நிர்வாகம், சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியாளர்களில் ஒரு பிரிவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சில தினங்களுக்கு முன் ஆலையில் இருந்து வெளியேறி, போராட்டத்தில் ஈடுபட்ட, 13 பணியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதை ரத்து செய்து, வேலை வழங்கக்கோரி, பணியாளர்களின் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் விரைவாக தீர்வு காணவில்லை எனில், மார்ச் முதல் வாரத்தில், சாம்சங் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என்றும், தொடர்ந்து மாநிலம் முழுதும் உள்ள அரசு தொழில் பூங்காக்களில் உள்ள ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றும், மார்க்., கம்யூ., கட்சியின், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கு இடம் அளிக்காத வகையில், சாம்சங் பிரச்னையை விரைந்து முடிக்கு மாறு அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 19ம் தேதி நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. அரசு உத்தரவின்படி, பேச்சுக்கு வருமாறு சாம்சங் நிர்வாகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஏற்கனவே தெரிவித்தபடி, 24ம் தேதி பேச்சுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. அன்று நடக்கும் பேச்சில் சுமுக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், ''பிரச்னையை விரைவாக முடிக்குமாறு அரசு கூறுகிறது; அதற்கு, சாம்சங் நிர்வாகம் ஒத்துழைப்பு தராமல் உள்ளது. பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்,'' என்றார்.