ADDED : மார் 22, 2024 11:03 PM
சென்னை:லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மூன்று தொகுதிகளில் த.மா.கா., போட்டியிட உள்ளது.
ஈரோடு தொகுதிக்கு அம்மாவட்ட தலைவர் விஜயகுமார்; ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கு மாவட்ட தலைவர் வேணுகோபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுஉள்ளனர்.
வழிபாடு
சென்னை த.மா.கா., தலைமையகத்தில், கட்சியின் தலைவர் வாசன் அளித்த பேட்டி:
இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். வரும், 24ம் தேதி துாத்துக்குடி தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆதரவோடு, 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையை, த.மா.கா., ஏற்படுத்தும்.
வரும் 27ம்தேதி, சர்ச், மசூதி, தர்காவுக்கு செல்கிறேன். அங்கு வழிபாடு நடத்திய பின், அடுத்த நாள் பிரசாரம் துவங்கி, 21 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது.
இவ்வாறு கூறினார்.
கடந்த 1996 சட்டசபை தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சியை உடைத்து, த.மா.கா., என்ற புதிய கட்சியை மூப்பனார் துவக்கினார்.
தி.மு.க.,வுடன் த.மா.கா., கூட்டணி அமைத்து லோக்சபா, சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அப்போது, த.மா.கா.,வுக்கு சைக்கிள் சின்னம் கிடைத்தது.
மகிழ்ச்சி
வாசன் தலைமையில் த.மா.கா., துவங்கிய பின், சந்திக்கிற இந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளதால் வாசன் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

