யானை வளர்க்காத ஊரில் கண்காணிக்க கமிட்டி எதுக்கு: வனத்துறை மீது எழும் சந்தேகம்
யானை வளர்க்காத ஊரில் கண்காணிக்க கமிட்டி எதுக்கு: வனத்துறை மீது எழும் சந்தேகம்
ADDED : மார் 05, 2025 04:51 AM

சென்னை : வளர்ப்பு யானைகள் இல்லாத மாவட்டங்களில், கண்காணிப்பு பணிக்காக கமிட்டி அமைக்கும் நடவடிக்கையில் வனத்துறை ஈடுபட்டுள்ளது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வனப்பகுதிகளில், 3,063 யானைகள் இருப்பதாக, கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய கணக்கெடுப்பில், 2,963 யானைகள் இருப்பதாக, வனத்துறை அறிவித்தது.
இதேபோன்று, கோவில்கள் மற்றும் தனியார் கட்டுப்பாட்டிலும் யானைகள் பராமரிக்கப்படுகின்றன. வளர்ப்பு யானைகள் பாதுகாப்பு தொடர்பாக, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதனடிப்படையில், கோவில்கள் மற்றும் தனியார் வளாகங்களில், வளர்ப்பு யானைகள் தங்கும் இடங்கள் எப்படி இருக்க வேண்டும் மற்றும் யானைகள் பராமரிப்பு தொடர்பாக, பல்வேறு கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளன.
எண்ணிக்கை குறைகிறது
தமிழகத்தில் காட்டு யானைகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வளர்ப்பு யானைகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த, 2015ல் 141 வளர்ப்பு யானைகள் இருந்த நிலையில், தற்போது, 127 மட்டுமே இருப்பதாக, வனத்துறையின் புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
ஆனால், கோவில்கள் மற்றும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள யானைகளின் நலன் குறித்து கண்காணிக்க, மாவட்டந்தோறும் யானைகள் நல கமிட்டி அமைக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வளர்ப்பு யானைகள் உள்ள மாவட்டங்களில் மட்டும், கமிட்டிகள் அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வந்தது.
தற்போது, வளர்ப்பு யானைகள் இல்லாத மாவட்டங்களிலும், யானைகள் நல கமிட்டி அமைக்கும் பணிகளில், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது, வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, யானைகள் பாதுகாப்புக்கான, 'எலபஸ் மாக்ஸிமஸ் இண்டிகஸ்' அறக்கட்டளை நிர்வாகி தீபக் நம்பியார் கூறியதாவது: தமிழகத்தில் வளர்ப்பு யானைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், வனத்துறை உரிய கவனம் செலுத்துவதில்லை.
கடந்த, 2021க்கு பின் வளர்ப்பு யானைகள் குறித்த கணக்கெடுப்பு அறிக்கையை, வனத்துறை வெளியிடாமல் உள்ளது. காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் தான் வளர்ப்பு யானைகள் உள்ளன. இதில், சில மாவட்டங்களில் தன்னார்வலர்கள் கிடைக்கவில்லை என்று கூறி, யானைகள் நலக் கமிட்டி அமைக்காமல் உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகள் முறையாக செயல்படாமல் உள்ளன.
![]() |
சந்தேகம்
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட யானைகள் இல்லாத மாவட்டங்களில், யானைகள் நல கமிட்டி அமைக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுஉள்ளனர். யானைகள் திட்டத்துக்காக, மத்திய அரசு வழங்கும் நிதியை பயன்படுத்தியதாக கணக்கு காட்டுவதற்காக, இதுபோன்ற கமிட்டிகளை அமைக்க, வனத்துறை முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, 'மாவட்டந்தோறும் யானைகள் நலக் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற, நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; வேறு காரணம் எதுவும் இல்லை' என்றார்.