மத்திய பட்ஜெட் விவகாரம் தி.மு.க., கூட்டணி கட்சிகள் தனித்தனி போராட்டம் ஏன்?
மத்திய பட்ஜெட் விவகாரம் தி.மு.க., கூட்டணி கட்சிகள் தனித்தனி போராட்டம் ஏன்?
ADDED : ஜூலை 26, 2024 10:19 PM
சென்னை:மத்திய அரசின் பட்ஜெட்டில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி, தி.மு.க., சார்பில், இன்று மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னையில் கலெக்டர் அலுவலகம், சைதைப்பேட்டை சின்னமலை ராஜிவ் சிலை அருகே, தாம்பரம், ஆவடி என, நான்கு இடங்களில், இன்று காலை, 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து, இன்று மாலை 4:00 மணிக்கு, தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் தாராபூர் டவர் அருகே, சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இப்பிரச்னையில், அடுத்த மாதம் 1ம் தேதி, மாநிலம் முழுதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, காங்., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதும், வெற்றி மாநாடு கோவையில் தி.மு.க., சார்பில் நடத்தப்பட்டது. அதற்கு கூட்டணி தலைவர்கள் அழைக்கப்பட்டனர்; மேடையில் ஒன்றாக கைகோர்த்தனர்.
சமீபத்தில், தொழிலதிபர் அதானியை, தி.மு.க., அதிகார மையத்தை சேர்ந்த ஒருவர் சந்தித்து பேசியுள்ளார். தொழிலதிபர் அம்பானி இல்ல திருமண விழாவில், தி.மு.க., அமைச்சர் பங்கேற்றார். மின் கட்டண உயர்வை கண்டித்து, தமிழகத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தின. ஆனால், பா.ஜ., சார்பில் எந்த போராட்டமும் அறிவிக்கப்படவில்லை. இது, தி.மு.க., மீது அதன் கூட்டணி கட்சிகளுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக கெட்டுப் போயிருப்பதை சுட்டிக் காட்டி, காங்., தரப்பில் தலைவர்கள் சிலர் ஆதங்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை என பல விஷயங்களிலும் தங்களுடைய நியாயமான வருத்தத்தை வெளிப்படையாக தெரிவித்தனர்.
இது தமிழக ஆளும் தரப்புக்கு மனம் வருத்தத்தை ஏற்படுத்தியதாக, அக்கட்சியினர் காங்., தலைவர்கள் சிலரிடம் புலம்பி உள்ளனர்.
இதற்கிடையில், தமிழக காங்., - எம்.பி.,யான கார்த்தி, வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பின், தி.மு.க., ஆட்சி அமைத்தால், அமைச்சரவையில் காங்.,குக்கு பங்கு கேட்க வேண்டும் என்று கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசினார். அதுவும் தி.மு.க., தலைமைக்கு காங்., மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே லேசான மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு தன்னுடைய பட்ஜெட்டில் தமிழகத்தை முழுமையாக புறக்கணித்துள்ளதை எதிர்த்து கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என தி.மு.க., தரப்பில் முடிவெடுக்கப்பட்டபோது, கூட்டணி கட்சியினருடன் இணைந்து நடத்தலாம் என்பதை தவிர்த்து, தன்னிச்சையாக நடத்த முடிவெடுத்துள்ளனர். கூடவே, தி.மு.க., ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டணி கட்சிகளை அழைக்கவில்லை.
கூட்டணி கட்சிகளுக்குள் நெருடல்கள் இருக்கலாம். அதற்காக, மத்திய அரசின் ஓரவஞ்சணையால், தமிழக நலன் புறக்கணிக்கப்படுவதை யாராலும் ஏற்க முடியாது.
அதனால், காங்கிரஸ், மத்திய அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, காங்., தரப்பில் தனித்து போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
காங்., போலவே, இந்த விஷயத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து முடிவெடுத்து, போராட்டம் அறிவித்துள்ளன.
இவ்வாறு காங்., வட்டாரத்தில் கூறப்படுகிறது.

