பழநி முருகன் மாநாட்டில் முதல்வர் பங்கேற்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கேள்வி
பழநி முருகன் மாநாட்டில் முதல்வர் பங்கேற்காதது ஏன்? முன்னாள் அமைச்சர் சீனிவாசன் கேள்வி
ADDED : ஆக 14, 2024 09:59 PM
திண்டுக்கல்:''சிறுபான்மையினர் கோபித்துக் கொள்வர் என்பதால் பழநி முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி:
முதல்வர் ஸ்டாலின் பழநியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் பங்கேற்காதது ஏன். அழைப்பிதழில் முதல்வர் அமைச்சர் உதயநிதி பெயர்கள் இல்லை. அனைத்து மதங்களுக்கும் பொதுவான ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் முதல்வர் ஸ்டாலின், அந்த வகையில் தான் நடந்து கொள்கிறார் என்றால், முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
முருகன் மாநாடு, அ.தி.மு.க., ஆட்சியின்போது நடந்திருந்தால், அதில் பொதுச்செயலர் பழனிசாமி கலந்து கொண்டிருப்பார். ஆனால், முருகன் மாநாட்டில் கலந்து கொண்டால், சிறுபான்மை இன மக்கள் தி.மு.க., மீது கோபம் கொள்வர் என நினைத்து, முதல்வர் மாநாட்டை புறக்கணித்துள்ளார். அதிக அளவு விளம்பரம் இல்லாமல், எளிமையாக விழா நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் பல கோடி ரூபாய் வரி பணத்தை எடுத்து கார் ரேஸ் நடத்த போவதாக அமைச்சர் உதயநிதி அறிவித்து உள்ளது தேவையில்லாதது. எதிர்த்து அ.தி.மு.க., வழக்கு போட்டுள்ளது; வெற்றி பெற்று, கார் ரேஸை நடத்த விடாமல் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.