'தரமற்ற குடியிருப்பு கட்டிய நிறுவனம் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?'
'தரமற்ற குடியிருப்பு கட்டிய நிறுவனம் அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?'
ADDED : ஜூலை 01, 2024 06:06 AM
சென்னை: 'தரமற்ற கட்டடங்கள் கட்டி வரும் பி.எஸ்.டி., நிறுவனத்திற்கு, மீண்டும், மீண்டும் அரசுப் பணிகளை வழங்கி வருபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை புளியந்தோப்பு கே.பி., பார்க் அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட் கோளாறு காரணமாக, 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து, கணேசன் 52 என்பவர் உயிரிழந்திருக்கிறார்.
ஏழை எளிய மக்களுக்காக கட்டப்பட்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு, தரமற்ற முறையில் கட்டப்பட்ட விபரங்களை, ஐ.ஐ.டி., ஆய்வுக் குழு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இந்த குடியிருப்பை கட்டிய பி.எஸ்.டி., இன்ஜினியரிங் நிறுவனம், அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாதவாறு, கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் என, தி.மு.க., அரசு கூறியது; ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு, சென்னை நந்தம்பாக்கத்தில், 250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதிநுட்ப நகரம் அமைக்க, மீண்டும் இதே பி.எஸ்.டி., நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து, 2023 ஜூன் 19ல் கேள்வி எழுப்பியிருந்தோம்.
அதற்கு பதிலளித்த தி.மு.க., அரசு, முறையான டெண்டர் வழியேதான், அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என பதிலளித்தது.
கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனம், எப்படி அரசு ஒப்பந்தத்தில் பங்கேற்றது என்ற கேள்விக்கு, இதுவரை பதில் இல்லை.
தற்போது, லிப்ட் கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயிருக்கிறது.
ஐ.ஐ.டி., ஆய்வறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தரகுறைவான கட்டடங்கள் கட்டும் நிறுவனத்துக்கே, மீண்டும், மீண்டும் அரசுப் பணிகள் வழங்கி வரும் தி.மு.க., அரசுதான் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும்.
ஏழை, எளிய மக்களின் உயிர் என்றால், தி.மு.க.,வுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா. உடனே இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தரமற்ற கட்டடங்கள் கட்டி வரும் பி.எஸ்.டி., நிறுவனம் மீதும், மீண்டும் மீண்டும் அரசுப் பணிகளை இந்த நிறுவனத்துக்கு வழங்கி வரும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.