செங்கல்பட்டோடு ரயிலை நிறுத்தியது ஏன்? பார்லி.,யில் கேள்வி எழுப்பிய சண்முகம்
செங்கல்பட்டோடு ரயிலை நிறுத்தியது ஏன்? பார்லி.,யில் கேள்வி எழுப்பிய சண்முகம்
ADDED : ஆக 07, 2024 10:47 PM
''தெற்கு ரயில்வே மண்டலத்தில், கொரோானா காலத்தில் ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில் சேவைகளையும் மீண்டும் இயக்க வேண்டும்,'' என, பார்லிமென்ட்டில் கோரிக்கை விடுத்துப் பேசினார், அ.தி.மு.க., - எம்.பி.,யான சி.வி.சண்முகம்.
ராஜ்யசபாவில் அவர் பேசியதாவது:
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் நெரிசலை பொது இடங்களில் கட்டுப்படுத்தி, நோய் தாக்குதலை தடுக்க வேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும், பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
கொரோனா தீவிரம் குறைந்து சகஜ நிலை திரும்பிய பின், நிறுத்தப்பட்ட ரயில் சேவையை தொடரச் செய்திருக்க வேண்டும். இதுவரை செய்யவில்லை.
இதனால், தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் உள்ளிட்ட பல பகுதிகளில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், அலுவலகம் செல்வோர், பெண்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தினந்தோறும் 10,000 பேர் வரை இப்படி பாதிக்கப்படுகின்றனர்.
தொழிற்சாலைகளை உள்ளடக்கிய நகரம் திண்டிவனம். இந்நகரத்தை ஒட்டி சிட்கோ மற்றும் சிப்காட் போன்ற தொழில் பேட்டைகளும் அமைந்துள்ளன.
அருகில் இருக்கும் புதுச்சேரி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களைச் சார்ந்து ஏராளமான மக்கள், தினந்தோறும் பல்வேறு பணிகளுக்காக, சென்று திரும்ப வேண்டியுள்ளது. அதற்கு ரயில் பயணம் தான் ஏற்றது. அதனால், ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளை உடனடியாக துவங்க வேண்டும்.
குறிப்பாக திண்டிவனத்தில் ரத்து செய்யப்பட்ட உழவன், மங்களூரு, சேலம், காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயில்களை கட்டாயம் இயக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் வரை முழுவதும் மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகலப் ரயில் பாதையாக மாற்றப்பட்டு விட்டது. அப்படி செய்யப்பட்டதன் நோக்கமே, இந்த மார்க்கத்தில் அதிக ரயில்களை இயக்கி, கூடுதல் சேவை அளித்திட வேண்டும் என்பதுதான்.
ஆனால், தற்போது எழும்பூரில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும், செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. அதைக் கடந்து இயக்கப்படுவதில்லை. அப்படியென்றால், மின்மயமாக்கலுடன் கூடிய இரட்டை அகல பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கம் என்ன?
எனவே, சென்னை எழும்பூரில் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் வரை நிறைய மின்சார ரயில்கள் தினந்தோறும் இயக்கப்பட வேண்டும். அதிவேக விரைவு ரயில்களையும், இதே மார்க்கத்தில் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு சண்முகம் பேசினார்.
-நமது டில்லி நிருபர்-