தமிழ் பாட தேர்வில் 'ஆப்சென்ட்' அதிகம் ஏன்? அரசின் விளக்கம் எதிர்பார்க்கும் கல்வியாளர்கள்
தமிழ் பாட தேர்வில் 'ஆப்சென்ட்' அதிகம் ஏன்? அரசின் விளக்கம் எதிர்பார்க்கும் கல்வியாளர்கள்
UPDATED : ஏப் 24, 2024 05:32 PM
ADDED : ஏப் 24, 2024 05:52 AM

திருப்பூர் : மாநிலத்தில், கடந்த இரு ஆண்டாக பொதுத்தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர், தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதாமல் 'ஆப்சென்ட்' ஆகும் நிலையில், 'அதற்கான விளக்கம் அளிப்பதுடன், மொழிப்பாடம் தவிர்த்த பள்ளிகளின் பட்டியலை, கல்வித்துறை வெளியிட வேண்டும்' என, கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை தொடர்ந்து, அடுத்தடுத்த வகுப்பில் தங்கள் மாணவர்களை சேர்க்க, பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு ஆண்டாகவே பொதுத் தேர்வில், தமிழ் மொழி பாட தேர்வில் மாணவ, மாணவியர் 'ஆப்சென்ட்' ஆவது அதிகரித்து வருகிறது.
நடந்து முடிந்த, 10ம் வகுப்பு பொது தேர்வில், 17,633 பேர், பிளஸ் 2 பொது தேர்வில், 12,364 பேர் தமிழ் மொழிப்பாட தேர்வு எழுதவில்லை.
இது, கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கற்றல் குறைபாடு சலுகை
கல்வித்துறை சார்பில், கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில், சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, உடல் மற்றும் மன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல், இயல்பான நிலையில் உள்ள மாணவ, மாணவியருக்கு கற்கும் திறன் மட்டும் சற்று குறைவாக இருக்கும். அத்தகைய நிலையில் உள்ள மாணவ, மாணவியர் பலரும், கற்றல் குறைபாடு என்ற அடிப்படையில் அரசின் சலுகை பெற்று தேர்வெழுதியுள்ளனர்.
அதன்படி, தமிழ் அல்லது ஆங்கில பாடத்தில் ஏதாவது ஒரு பாடத்தை தேர்வெழுதாமல் தவிர்ப்பது, தேர்வெழுத வழக்கமாக ஒதுக்கப்படும் நேரத்தை விட, கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது, கணித பாடத்துக்கு கால்குலேட்டர் பயன்படுத்துவது உட்பட சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி, ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் பலர், தமிழ் பாடத்தை எழுதாமல் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
பட்டியல் வெளியிடணும்!
கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:
கற்றல் குறைபாடு என்பது, ஒரு நோயல்ல. உடல், மன ரீதியாக எந்த பாதிப்பும் இல்லாமல், இயல்பாக உள்ள மாணவ, மாணவியருக்கான, கற்றல் சார்ந்த ஒரு பிரச்னை தான் அது. அவர்களுக்கு கற்பிக்கும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் சற்று சிரத்தை எடுக்க வேண்டும்.
அவர்களது படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். அவர்கள் நன்கு படித்து, தேர்வில் வெற்றியும் பெறுவர். ஆனால், கற்பித்தலில் சிரத்தை எடுக்க விரும்பாத பெரும்பாலான பள்ளிகள், கற்றல் குறைபாடு என்ற அரசின் சலுகையை பயன்படுத்தி, மொழிப்பாடத்தில் இருந்து மாணவ, மாணவியருக்கு விலக்கு பெற்று, அவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற செய்து விடுகின்றன.
மாவட்ட வாரியாக, இவ்வாறு, எந்தெந்த பள்ளிகள் மொழிப்பாடத்தில் விலக்கு பெற்றுள்ளன; எத்தனை குழந்தைகள் மொழிப்பாடங்களை தவிர்த்துள்ளனர் என்ற விபரத்தை அரசு வெளியிட வேண்டும்.
அத்தகைய விலக்கு பெற்ற மாணவ, மாணவியர் உண்மையில் அந்த பாடங்களை பயில்வதில் மந்தநிலையில் தான் உள்ளனரா, அவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
அல்லது, தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பள்ளிகள் அத்தகைய சலுகையை பயன்படுத்திக் கொண்டனவா என்பது குறித்தும் ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

