நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
UPDATED : ஜூலை 27, 2024 02:54 PM
ADDED : ஜூலை 27, 2024 07:38 AM

சென்னை: டில்லியில் இன்று(ஜூலை 27) நடக்கும், நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கால் மக்கள் மன்றத்தில் இன்று நிற்கிறேன். லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை பல்வேறு மாநில மக்கள் புறக்கணித்தனர். பா.ஜ.,வை புறக்கணித்த மக்களை பழிவாங்கும் பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்பட்டது. இண்டியா கூட்டணிக்கு ஓட்டளித்த மக்களை பழிவாங்குவதற்காகவே பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பா.ஜ., அரசு புறக்கணித்து வருகிறது. தொடர்ந்து தவறுகளை செய்து வந்தால், மேலும் தோல்வியை சந்திப்பீர்கள்.
இடையூறு
மதுரை எய்ம்ஸ் திட்டம் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஒரு சில மாநில கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பா.ஜ.,வால் ஆட்சி அமைத்திருக்க முடியாது. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டத்தையும் பா.ஜ., அறிவிக்கவில்லை. தமிழகம் என்ற பெயரும் பட்ஜெட்டில் இல்லை.
குறளும் இல்லை. பா.ஜ.,வுக்கு திருவள்ளுவரும் கசந்துபோய் விட்டார். நல்ல அரசு என்பது ஓட்டளிக்காத மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் வழங்காமல் ஓட்டுகளை மட்டும் பா.ஜ., எதிர்பார்க்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு மத்திய பா.ஜ., அரசு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
ஏமாற்றமே
நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி என்பது தான் நமது திராவிட மாடல் அரசின் நோக்கம். கடந்தாண்டு 2 முறை புயல் தாக்கிய நிலையில் வெள்ள நிதியை வழங்காமல் பா.ஜ., அரசு ஏமாற்றியிருக்கிறது. தங்கள் சறுக்கலுக்கான காரணத்தை உணர்ந்து பா.ஜ., அரசு திருந்தியிருக்கும் என நினைத்தேன். ஆனால் ஏமாற்றமே. மத்திய பா.ஜ., ஆட்சியில் நாற்காலியின் கால்களாக உள்ள மாநிலங்களுக்கு மடடும் கூடுதல் நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டி உள்ளது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

