தேனியில் டிபாசிட் இழந்தது ஏன்? கட்சியினரிடம் பழனிசாமி கேள்வி
தேனியில் டிபாசிட் இழந்தது ஏன்? கட்சியினரிடம் பழனிசாமி கேள்வி
ADDED : ஜூலை 24, 2024 09:04 PM
சென்னை:'அ.தி.மு.க., கோட்டையான, தேனி தொகுதியில், டிபாசிட் இழப்பதற்கு என்ன காரணம்?' என, தொகுதி நிர்வாகிகளிடம் பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து, தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளுடன், அ.தி.மு.க,வில் ஆலோசனைக் கூட்டம் நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை, 23 தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டத்தில், தேனி, ஆரணி தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
தேனி தொகுதி அ.தி.மு.க., கோட்டை. அங்கு டிபாசிட் பறி கொடுத்தது ஏன் என, பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நிர்வாகிகள், 'தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் ஆகிய இருவரும் பிரபலமானவர்கள்; இருவருமே நம் கட்சியில் இருந்து சென்றவர்கள் தான். அவர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு வலுவான ஒருவரை நம் கட்சி சார்பில் வேட்பாளர் நியமித்திருக்க வேண்டும். அவர்கள் நம் கட்சி சார்பில் புதுமுகம் போட்டியிட்டதால், பின்னடைவை சந்தித்தோம்' என்றனர்.
இதை ஏற்க மறுத்த பழனிசாமி, 'பிரபலமானவர்கள் என்பதெல்லாம் ஏற்புடையதல்ல. நம் சின்னம் இரட்டை இலையை விட பிரபலமானது கிடையாது. நடந்ததை விடுங்கள். சட்டசபை தேர்தலில், தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும். அதற்கான வேலைகளை செய்யுங்கள். தி.மு.க., அரசின் அவலங்கள் குறித்து, திண்ணை பிரசாரம் செய்யுங்கள். தேனி மாவட்டத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் மருத்துவக் கல்லுாரி கொண்டு வந்ததுடன், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். அதை எடுத்துக் கூறுங்கள்' என்றார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''தேர்தல் களத்தில் எப்படி உழைக்க வேண்டும் என்றும், மக்களிடம் அ.தி.மு.க., அரசின் சாதனைகளை திண்ணை பிரசாரம் வழியே எடுத்து சொல்லவும், பழனிசாமி அறிவுரை வழங்கினார். அவர் வகுத்து கொடுத்த தேர்தல் வியூகத்தை முழுமையாக செயல்படுத்துவதாக உறுதி அளித்துள்ளோம்,'' என்றார்.