விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி காலமானார்
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி காலமானார்
UPDATED : ஏப் 06, 2024 01:18 PM
ADDED : ஏப் 06, 2024 10:57 AM

விழுப்புரம்: விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ.,யுமான புகழேந்தி இன்று(ஏப்ரல் 06) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி வந்திருந்தார். அவர் மேடை அருகே இருந்த ஓய்வு அறையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் புகழேந்தி அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். மருத்துவமனை முன்பு குவிந்த புகழேந்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எம்.எல்.ஏ., புகழேந்தியின் எதிர்பாராத மறைவு அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. உடல்நலனைப்பற்றி சிந்திக்காமல் திமுக வெற்றிக்காக புகழேந்தி பணியாற்றி வந்தவர். உடல்நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில் புகழேந்தி நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஈடு செய்ய முடியாத புகழேந்தியின் மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.