போதையில் தகராறு செய்த கணவரை அடித்து கொன்ற மனைவி கைது
போதையில் தகராறு செய்த கணவரை அடித்து கொன்ற மனைவி கைது
ADDED : ஜூன் 11, 2024 12:10 AM

ஓசூர் : தேன்கனிக்கோட்டை அருகே, குடிபோதையில் தகராறு செய்த கணவரை, அடித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கலகோபசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பிரெட்டி, 48, கூலித்தொழிலாளி.
இவரின் மனைவி மஞ்சுளா, 37. இவர்களுக்கு, 12 வயதில் மகன் உள்ளார். குடிப்பழக்கமுள்ள பாப்பிரெட்டி, மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு, 11:30க்கு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அவர், மஞ்சுளாவிடம் தகராறு செய்தார்.
ஆத்திரமடைந்த மனைவி மஞ்சுளா வீட்டில் களி கிண்ட வைத்திருந்த கட்டையால், கணவர் பாப்பிரெட்டியின் தலை உள்ளிட்ட பல பகுதிகளில் பலமாக தாக்கினார்.
படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது அண்ணனான கெலமங்கலம் நேதாஜி நகரை சேர்ந்த முனிரெட்டி, 52, புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், மஞ்சுளாவை நேற்று மாலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

