ADDED : ஆக 03, 2024 12:04 AM
திருவாரூர்:திருவாரூர் அருகே, கணவனை அடித்துக்கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் அருகே, அகரத்திருநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் காத்தராசு, 57; கட்டட தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி,48. இவர்களுக்கு, இரு மகள்கள்; இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதில், இளையமகள், அவரது கணவர் வீட்டில் கோபித்துக்கொண்டு, பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இது தொடர்பாக, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காத்தராசு, நீலாவதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நீலாவதி, இரும்பு ஆணி பிடுங்கும் கம்பியால் கணவனை நெற்றியில் அடித்தார். அதே இடத்தில் அவர் இறந்தார்.
தகவல் அறிந்த, திருவாரூர் தாலுகா போலீசார், காத்தராசு உடலை கைப்பற்றி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் வழக்கு பதிந்து, நீலாவதியை கைது செய்தனர்.