மனைவியின் சகோதரர் அவ்வளவு தான்! சவுக்கு சங்கர் பற்றி வேட்பாளர் விளக்கம்
மனைவியின் சகோதரர் அவ்வளவு தான்! சவுக்கு சங்கர் பற்றி வேட்பாளர் விளக்கம்
ADDED : மார் 31, 2024 03:06 AM
சென்னை,: 'சவுக்கு சங்கர் என் மனைவியின் சகோதரர் அவ்வளவு தான். அவரது செயல்களினால், எங்களுக்கு பேச்சு கூட கிடையாது' என, திருவள்ளூர் தொகுதி காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார்.
'சவுக்கு மீடியா' என்ற பெயரில், யு டியூப் சேனல் ஆரம்பித்து தி.மு.க.,விற்கும், அரசிற்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருபவர் சங்கர்.
இவர் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் மீது தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவரது சகோதரி கணவரை, திருவள்ளூர் தனித்தொகுதி வேட்பாளராக காங்., கட்சி களமிறக்கியுள்ளது.
இந்த விபரம் வெளியில் கசிந்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.,வினர் ஒதுங்க ஆரம்பித்து உள்ளனர். இது, சசிகாந்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, சமூக வலைதளத்தில் ஒருவர் எழுப்பியுள்ள கேள்விக்கு, சசிகாந்த் கூறியுள்ள பதில் விபரம்:
நானும், என் மனைவியும், ஒரே கல்லுாரி மாணவர்கள். நாங்கள் சந்தித்தது 1996. சங்கர் என் மனைவியின் சகோதரர், அவ்வளவுதான்.
என், 'ஐடியாலஜி'க்கும், சங்கர் செயல்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சொல்லப்போனால், அவரது செயல்களினால் எங்களுக்குள் பேச்சு கூட கிடையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

