பா.ஜ., பிரமுகர் மீது குண்டாஸ் ரத்து செய்ய மனைவி வழக்கு
பா.ஜ., பிரமுகர் மீது குண்டாஸ் ரத்து செய்ய மனைவி வழக்கு
ADDED : ஆக 05, 2024 09:43 PM
சென்னை:குண்டர் தடுப்பு சட்டத்தில், பா.ஜ., பிரமுகர் அலெக்சிஸ் சுதாகர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரி, அவரது மனைவி தொடர்ந்த மனுவுக்கு போலீசார் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை சேர்ந்தவர் சத்யராஜ், 40. ரவுடியான இவர், கடந்த ஜூனில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், வழக்கறிஞர் ஒருவரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று திரும்பும்போது கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சத்யாவுக்கு, சட்டவிரோதமாக துப்பாக்கி வழங்கியதாக, பா.ஜ., மாநில வழக்கறிஞர் பிரிவு செயலர் அலெக்சிஸ் சுதாகரை, மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அலெக்சிஸ் சுதாகர் மனைவி ஆண்டோ கிறிஸ்பின் ஜெனிதா, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்.சத்திவேல் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவுக்கு, செங்கல்பட்டு கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.