வனவிலங்கு வேட்டை மூவர் கைது: அ.தி.மு.க., நிர்வாகி உட்பட மூவரை வனத்துறையினர் தேடல்
வனவிலங்கு வேட்டை மூவர் கைது: அ.தி.மு.க., நிர்வாகி உட்பட மூவரை வனத்துறையினர் தேடல்
UPDATED : ஏப் 22, 2024 10:06 PM
ADDED : ஏப் 22, 2024 08:23 PM

கூடலூர்: முதுமலை அருகே, வனவிலங்கு வேட்டை தொடர்பாக நாட்டு துப்பாக்கிகள், தோட்டாகளுடன் மூவரை கைது செய்த வனத்துறையினர், அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை கூடலூரை ஒட்டிய, சில்வர் கிளவுட் அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில் வனவிலங்கு வேட்டை தொடர்பாக, கூடலூர் தர்மகிரியை சேர்ந்த பைசல், 46, விமலகிரியை சேர்ந்த ஷாபுஜாக்கோப், 48, ஆகியோரை நேற்று, வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள், அல்லூர்வயல் அருகே உள்ள, சஜீவன் என்பவருக்கு சொந்தமான எஸ்டேட்டில் தங்கி, தோட்டத்தில் உள்ள வேலைகள் செய்து வருவது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள், பயன்படுத்தாத தொட்டா 11, பயன்படுத்திய தொட்ட இரண்டு, கத்தி, ரத்த கரை படிந்த கோடாரி, டார்ச் லைட் பறிமுதல் செய்தனர்.
மேலும், இவர்கள், எஸ்டேட் பகுதிக்குள் வந்து செல்லும் வன விலங்குகளை வேட்டையாட, எஸ்டேட் பொறுப்பாளராக பணியாற்றி வரும் சுபைர் மூலம், ஆறு மாதங்களுக்கு முன் புளியம்பாறை சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவரிடம் கள்ள துப்பாக்கி வாங்கியுள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன், சருகுமானை சுட்டு அதன் இறைச்சியை சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.மேலும், எஸ்டேட் கணக்காளராக பணிபுரியும் பரமசிவத்திடம் அன்றாட தேவைக்காக செலவுக்காக பணம் பெற்றுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன் காட்டெருமையை சுட்டு, இறைச்சி எடுத்துக் கொண்டு, அதன் பாகங்களை, வாகனத்தில் ஏற்றி சென்று தனியார் ஸ்டேட் காபி தோட்டத்தில் வீசி சென்றுள்ளனர். அதனை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து பரமசிவம், 47, வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்டு விசாரணையில், சஜீவனின் பர்னிச்சர் கடையில் 15 ஆண்டுகளாக வேலை செய்ததாகவும்; தொடர்ந்து எஸ்டேட் கணக்குகளை பார்த்து வருவதாகவும்; கைது செய்யப்பட்ட பைசல், ஷாப் இருவரும் எஸ்டேட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க பணம் கேட்டால் அதை, சஜீவனிடமிருந்து வாங்கிக் கொடுப்பதாகவும்; அவர்கள் துப்பாக்கி வாங்கி இருப்பதாகவும் அதற்கு தோட்டாக்கள் வாங்கி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பாக, மூவரை கைது செய்துள்ள வனத்துறையினர், இடத்தின் உரிமையாளர் சஜீவன் மற்றும் சுபைர், ஸ்ரீகுமார் ஆகியோரை தனிப்பட அமைத்து தேடி வருகின்றனர்.
வனத்துறையினர் தேடி வரும் இடத்தின் உரிமையாளர் சஜீவன், பர்னிச்சர் தொடர்பாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதுடன், அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில தலைவராகவும் உள்ளார்.

