திராவிட கட்சிகளுடன் மீண்டும் பா.ம.க., கூட்டணி அமைக்குமா? மனம் திறக்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
திராவிட கட்சிகளுடன் மீண்டும் பா.ம.க., கூட்டணி அமைக்குமா? மனம் திறக்கிறார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்
ADDED : ஜூலை 15, 2024 11:29 PM

கடந்த 1989ம் ஆண்டு ஜூலை 16ம் தேதியன்று, பாட்டாளி மக்கள் கட்சியை, டாக்டர் ராமதாஸ் துவக்கினார். 35 ஆண்டுகளை நிறைவு செய்து, 36ம் ஆண்டில் அக்கட்சி இன்று (16ம் தேதி) அடி எடுத்து வைக்கிறது. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக பா.ம.க., திகழ்கிறது. அரசியலில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும், இட ஒதுக்கீடு, சமூக நீதி, மது விலக்கு போன்ற கொள்கைகளில் மிக உறுதியாக நின்று தனது அரசியல் பயணத்தை தொடர்கிறது.
தமிழக அரசியலில் தனி முத்திரையை பதித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் ஆண்டு விழாவை முன்னிட்டு, திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
● பா.ம.க.,வை நீங்கள் துவக்கி 35 ஆண்டுகள் நிறைவடைந்து, 36வது ஆண்டில் இன்று அடி எடுத்து வைக்கிறது. பா.ம.க.,வை நீங்கள் துவக்கியதன் நோக்கம் நிறைவேறி விட்டதா?
ஓரளவிற்கு நிறைவேறி இருக்கிறது; இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்று தான் கூற வேண்டும். பா.ம.க.,வின் கொள்கை சமூக ஜனநாயகம். இதன் அடிப்படையில் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நோக்கங்களுடன் தொடங்கப்பட்டதுதான் பா.ம.க., வன்னியர் சங்கத்திலிருந்து பா.ம.க., தொடங்கப்பட்டாலும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களின் பிரதிநிதியாகவே பா.ம.க., திகழ்கிறது.
தமிழகத்தில் யாருக்கு என்ன சிக்கல் என்றாலும் அதற்கான முதல் குரல், பா.ம.க.,விடமிருந்துதான் ஒலிக்கும். பா.ம.க., ஆட்சிக்கு வராமலேயே வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு, 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு, 3.5 சதவீத இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3 சதவீத அருந்ததியர் இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகளை வென்றெடுத்துள்ளது.
மேலும், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றையும் பா.ம.க., பெற்று தந்துள்ளது.
● லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் என ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் கூட்டணியை மாற்றிக் கொண்டே இருப்பது ஏன்?
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாற வேண்டும் என்று எந்த அரசியல் கட்சியும் நினைப்பதில்லை. அரசியல் சூழல்கள்தான் தேர்தல் கூட்டணியை தீர்மானிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த அடிப்படையில்தான் கூட்டணியை தீர்மானிக்கும்.
● தேர்தலுக்கு தேர்தல் நீங்கள் கூட்டணியை மாற்றுவதால் தான் வெற்றி பெற முடியவில்லை என்ற அரசியல் நோக்கர்களின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பா.ம.க., இடம் பெறும் அணிதான் வெற்றி பெறும். இதன் காரணமாகவே பா.ம.க.,வுடன் கூட்டணி அமைக்க தமிழக கட்சிகள் போட்டி போடுகின்றன. தேர்தலில் வெற்றி தோல்வி மாறி, மாறி வரும். இனி வரும் தேர்தலில் பா.ம.க., இருக்கும் அணிதான் வெற்றி பெறும்.
● நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்ததில், உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை என்றும், அன்புமணியின் வலியுறுத்தலால்தான் கூட்டணி அமைத்ததாகவும் கூறப்படுகிறதே...
அது தவறு. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க பா.ம.க., பொதுக்குழு எனக்கு அதிகாரம் வழங்கியது. அதன் அடிப்படையில் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டுதான் கூட்டணி தீர்மானிக்கப்பட்டது. கூட்டணியை தனி நபர் தீர்மானிக்க முடியாது.
● பா.ஜ., - பா.ம.க., கூட்டணி லோக்சபா தேர்தலில் தோல்வியடைய காரணம் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும் பணத்தை வாரி இறைத்தது. நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது. பா.ம.க., - பா.ஜ., அணிக்கு ஓட்டு போடாததற்கு தமிழக மக்கள் இப்போது வருந்துகின்றனர்.
● திராவிட கட்சிகளுடன் மீண்டும் நீங்கள் கைகோர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இந்த நோக்கத்தை எட்டுவதை அடிப்படையாக கொண்ட அரசியல் சூழல்தான் எதிர்கால கூட்டணியை தீர்மானிக்கும்.
● மாநில கட்சி அங்கீகாரத்தை பா.ம.க., இழந்துள்ளது. அந்த அங்கீகாரத்தை மீண்டும் பெற நீங்கள் வைத்துள்ள திட்டம் என்ன?
மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்திருப்பது தற்காலிக பின்னடைவுதான். பா.ம.க.,வின் வலிமையை மேலும் வலுப்படுத்துவதற்கான உத்திகளை வகுத்து செயல்படுத்தி வருகிறோம். வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று மாநில கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெறுவோம்.
● முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியின் செயல்பாட்டிற்கு நீங்கள் தரும் மதிப்பெண் என்ன?
தேர்வில் சரியான விடைகளை எழுதினால்தான் மதிப்பெண் வழங்க முடியும். ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இடஒதுக்கீடு, தரமான கல்வி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டால் தான் தி.மு.க., அரசுக்கு மதிப்பெண் வழங்க வாய்ப்பு ஏற்படும்.
●
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது?
மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியின் செயல்பாடுகளுக்கு நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் தான் சான்று. இரண்டு முறை வெற்றி பெற்று, 10 ஆண்டுகள் ஆட்சி செய்த நரேந்திர மோடியை, நாட்டு மக்கள் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்தி இருக்கின்றனர்.
இதில் இருந்தே அவரது தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகளை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
●
மத்திய அரசுடன் உங்களுக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு என்ன திட்டங்களை பெற்று தரப் போகிறீர்கள்?
பா.ம.க.,வை சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தபோது அறிவிக்கப்பட்ட ஏராளமான ரயில்வே திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம், காவிரி - குண்டாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழக மக்களின் கனவாக உள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்த மோடியிடம் கோரிக்கை வைப்போம்.
●
மத்திய பா.ஜ., அரசில் அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா? கூட்டணி உறவுக்கு மதிப்பளித்து மத்திய அமைச்சர் பதவியை பா.ஜ., வழங்குமா?
அன்புமணி, மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என பா.ம.க., கேட்கவில்லை. இதுதொடர்பாக எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை.
●
உங்களுக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஏற்கனவே இருந்த நெருக்கம் தற்போது இல்லை என கூறப்படுகிறதே...
நல்ல நகைச்சுவை. ஒவ்வொரு நாளும் தைலாபுரம் தோட்டத்தில் 200 பேர் வரை என்னை சந்தித்து குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்கின்றனர். பா.ம.க.,வினரை சந்திப்பது, உரையாடுவது எனது உயிருக்கு இணையான செயல்.
●
பா.ம.க., தொண்டர்களும் முன்பு போல உணர்வுப்பூர்வமாக கட்சி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்ற கருத்து எழுந்துள்ளதே...
அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க.,வின் களப்பணிகளை பார்த்தீர்களா? தமிழகம் முழுவதும் பா.ம.க.,வினரின் கட்சி பணி மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்து ஆய்வு செய்யுங்கள்.
● ஜாதி வாரி கணக்கெடுப்பை நீங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறீர்கள். இந்த கணக்கெடுப்பை தி.மு.க., அரசு நடத்துமா? இதுதொடர்பாக உங்கள் கருத்து என்ன?
தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது 45 ஆண்டு கால கோரிக்கை. கடந்த 1980ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி திண்டிவனத்தில் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டபோது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே, ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான்.
தி.மு.க., அரசு தானாக முன்வந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை. தொடர் போராட்டங்களை நடத்தி தான் சாதிக்க முடியும்.
●
வன்னிய சமுதாய மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு நீங்கள் மேற்கொண்டுள்ள தொடர் முயற்சிகள் என்ன?
உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என 2022ம் ஆண்டு மார்ச் 31ம் நாள் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறிய தி.மு.க., அரசு வன்னியர்களை ஏமாற்றி விட்டது.
இதற்காக வன்னியர் சங்கத்தின் கூட்டத்தை கூட்டி, போராட்ட அறிவிப்பு வெளியிட இருக்கிறோம்.
●
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவு குறித்து உங்கள் கருத்து என்ன?
தேர்தலில் முதல்வர் தவிர, மீதமுள்ள 33 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பணியாற்றினர். ஓட்டுக்கு 3,000 ரூபாய் கொடுத்தனர். இதையும் மீறி பா.ம.க., வேட்பாளர் 56 ஆயிரத்து 296 ஓட்டுகள் பெற்றார்.
இது, தி.மு.க.,விற்கு வெற்றியும் அல்ல; பா.ம.க.,விற்கு தோல்வியும் அல்ல.
●
தமிழகத்தில் பா.ம.க., ஆட்சி என்ற கோஷம் வரும் தேர்தலிலாவது செயல்வடிவம் பெறுமா?
கண்டிப்பாக... பொறுத்திருந்து பாருங்கள்.
●
இந்த சிறப்பு பேட்டி மூலமாக உங்கள் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?
மக்களை சந்தியுங்கள், அவர்களுடன் இணைந்து வாழுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்காக போராடி கோரிக்கைகளை நிறைவேற்றி தாருங்கள்.
நம்முடைய பணிகளை மக்கள் கவனித்து கொண்டிருக்கின்றனர். அதற்கான வெகுமதியை உரிய நேரத்தில், உரிய வகையில் தருவார்கள்.
●
வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ள கட்சி என்ற நிலை மாறி, மாநிலம் முழுதும் வலுவாக இருக்கும் கட்சியாக பா.ம.க.,வை மாற்ற என்ன செய்ய போகிறீர்கள்?
தமிழகம் முழுவதும் வாழும் மக்களுக்கான கட்சிதான் பா.ம.க., அனைத்து பகுதிகளிலும் பா.ம.க.,வை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். பா.ம.க.,வின் பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய இருவரும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த சில சிறப்பு திட்டங்களை வைத்திருக்கிறோம்.
இவ்வாறு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். இந்த நோக்கத்தை எட்டுவதை அடிப்படையாக கொண்ட அரசியல் சூழல்தான் எதிர்கால கூட்டணியை தீர்மானிக்கும்.
இன்றைய ஆட்சியாளர்களால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாது. பா.ம.க., அதிகாரத்திற்கு வந்த பிறகு முதல் நடவடிக்கையாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும்.
- நமது சிறப்பு நிருபர் -

