தென்மாவட்டங்களுக்கு கூடுதல் அந்தியோதயா ரயில் இயக்கப்படுமா?
தென்மாவட்டங்களுக்கு கூடுதல் அந்தியோதயா ரயில் இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 15, 2024 11:13 PM
சென்னை:சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வழக்கமான விரைவு ரயில்களில் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. எனவே, அந்தியோதயா ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
கூட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில், சாதாரண மக்கள் பயனடையும் வகையில், ரயில்வே சார்பில், 'அந்தியோதயா' என்ற பெயரில், முன்பதிவு இல்லாத விரைவு ரயில் சேவை 2017ல் துவக்கப்பட்டது.
மொத்தம் 18 பெட்டிகள் உடைய இந்த ரயிலில், பயணியருக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கும்.
முதல் சேவை
கடந்த 2017ல் மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே, இந்த வகை ரயிலின் முதல் சேவை துவக்கப்பட்டது.
அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, 15க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அந்தியோதயா ரயிலில், தினமும் ஆயிரக்கணக்கானோர் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்கின்றனர்.
தென்மாவட்டங் களில் இருந்து சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.
சில நேரங்களில் முன்பதிவு பெட்டிகளிலும் ஆக்கிரமித்து பயணிப்பதால், முன்பதிவு செய்து உள்ள பயணியரும் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, பயணி யர் கூறுகையில், 'தென்மாவட்டங்களுக்கு போதிய அளவில் ரயில்கள் இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர். எனவே, நெரிசல் மிக்க வழித்தடங்களில் அந்தியோதயா ரயில்களை இயக்கினால், ஒரே நேரத்தில் அதிகம் பேர் பயணம் செய்ய முடியும்' என்றனர்.
கூடுதல் பாதைகள்
தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. தெற்கு ரயில்வேயில், தற்போது பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நாகர்கோவில் - கன்னியாகுமரி இடையே இரட்டை பாதை பணியும் முடிந்து, விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதனால், கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட்டுஉள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

