ADDED : பிப் 23, 2025 05:15 AM

சென்னை: நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அக்கட்சியில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைக்கு மாறாக செயல்படுவதாகக் கூறி, அக்கட்சியில் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
அவர்களில் பலர் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளர். ஒரு சிலர் தங்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு, தனி அமைப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 2ம் தேதி நடக்க உள்ள, 'உறவுகள் சங்கமம்' நிகழ்ச்சியில், தி.மு.க., - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதில், காளியம்மாளும் பங்கேற்க உள்ளார். இதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில், கட்சிப் பெயர் எதுவும் இல்லாமல், சமூக செயற்பாட்டாளர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அப்படி குறிப்பிட்டால் போதும் என காளியம்மாளே குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படியே, நாம் தமிழர் கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் காளியம்மாள் பெயர் அழைப்பிதழில் இடம் பெற்று இருக்கிறது.
இதனால், காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகி இருப்பது உறுதியாகி உள்ளது. அதேநேரம், தி.மு.க., மற்றும் த.வெ.க.,வில் இணைவது குறித்து, காளியம்மாளிடம் பேச்சு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, காளியம்மாளிடம் கேட்டபோது, ''அனைத்திற்கும் விரைவில் பதில் சொல்கிறேன்,'' என்றார்.
கட்சிக்கு
களையுதிர் காலம்!
நாம் தமிழர் கட்சி பெண்கள் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து பணியாற்றிய காளியம்மாள், கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால், அவர் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்து, வேறு கட்சியில் இணைந்தால், அதற்கு எந்தத் தடையும் இல்லை. அப்படியொரு முடிவெடுக்க அவருக்கு முழு சுதந்திரம் உள்ளது. பருவ காலங்களில் மரங்களுக்கு இலையுதிர் காலம் என்ற ஒன்று உண்டு. அதே போல, நாம் தமிழர் கட்சிக்கு தற்போது களையுதிர் காலம். கட்சியில் களையாக இருப்போர், தாங்களாகவே கட்சியில் இருந்து உதிர்ந்து விடுவர்.
- சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.