ADDED : மே 17, 2024 01:27 AM
சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, ஜூன் 12ம் தேதி, டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்கு நீர் திறக்கப்படும்.
திருச்சியில் காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறாக பிரிந்து செல்கிறது. காவிரி நீரை சேமிக்கும் வகையில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருச்சி - முக்கொம்பு, கம்பரசன்பேட்டை, கரூர் - மாயனுார், கடலுார் - அணைக்கரை, தஞ்சாவூர் - கல்லணை ஆகிய இடங்களில் கதவணை மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களில், ஜூன் மாதம் குறுவை சாகுபடி துவங்கவுள்ள நிலையில், நீர் வழித்தடங்களில் துார்வாரும் பணிகள், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தீவிரமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை இம்மாதம் 31ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஐந்து கதவணை மற்றும் தடுப்பணைகளில், 1 மீட்டருக்கு மேல் மணல் தேங்கியுள்ளது.
இதனால், மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர், கதவணைகளை விரைவாக கடந்து, டெல்டா மாவட்டங்களுக்கு செல்வதில் தடை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனால், காவிரி கரைகள் உடையும் அபாயமும் உள்ளது.
நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கதவணை மதகு பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் துார்வாரினால், நீர் எளிதாக குறித்த காலத்தில் வெளியேறும். இல்லாவிட்டால், டெல்டா கடைமடை பகுதிகளுக்கு நீர் செல்வதற்கு ஒரு மாதம் வரையாகும்.
எனவே, கதவணைகளில் உள்ள மணல் அடைப்புகளை நீக்குவதற்கு, அரசின் அனுமதி கோரப்பட்டு உள்ளது. மணல் அள்ளுவதால், அரசுக்கு வருவாய் கிடைக்கும். துார்வாரும் பணியால் செலவு ஏற்படாது. குறுகிய கால அவகாசமே இருப்பதால், அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறோம்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

