மக்காச்சோளத்திற்கு வரி விதிப்பதா? தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்த திட்டம்
மக்காச்சோளத்திற்கு வரி விதிப்பதா? தமிழக கட்சிகள் போராட்டங்கள் நடத்த திட்டம்
ADDED : மார் 06, 2025 06:47 AM

சென்னை; மக்காசோளத்துக்கு, ஒரு சதவீதம் சந்தை வரியை தமிழக அரசு விதித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளன.
தமிழக அரசால், மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்ட, 1 சதவீத செஸ் எனப்படும் சந்தை வரியை ரத்து செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ஆதரவாக, பா.ஜ., காங்கிரஸ், த.மா.கா., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், போராட திட்டமிட்டுள்ளன. வரி ரத்து தொடர்பாக, அவர்கள் அறிக்கையும் வெளியிட்டுள்ளனர். அவற்றின் விபரம்:
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்: விவசாயிகள் நலனுக்காக, மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தபோது கடுமையாக எதிர்த்த தி.மு.க., தற்போது, மக்சாச்சோளத்துக்கு, ஒரு சதவீத 'செஸ்' எனப்படும் சந்தை வரியை விதித்துள்ளது. இது, விவசாயிகளை பாதிப்படைய செய்துள்ளது.
ஏற்கனவே, இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் விவசாயிகள், வரி விதிப்பால் மேலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. விடுமுறை நாட்களில், வரி செலுத்த முடியாத நிலையில், மக்காச்சோளம் விற்பனை செய்வது தடுக்கப்படும்.
விவசாயத்திற்கு ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், மக்காச்சோளம் உற்பத்தி குறைந்து வரும் நிலையில், செஸ் வரி விதிப்பு, மேலும் அதன் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தமிழகத்திற்கு ஆண்டுக்கு, 15 லட்சம் - 20 லட்சம் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது.
மயில், காட்டுப்பன்றி, பூச்சி ஆகியவற்றால் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு இழப்பு அதிகம் ஏற்படுகிறது. அதையும் சமாளித்து, அறுவடை செய்து, சந்தையில் விற்க கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இந்த சூழலில், அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் செஸ் வரி விதிப்பை, அரசு முழுதுமாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி: மக்காச்சோளம் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு, 2,000 ரூபாய், வர்த்தகர் தரப்பில் தரப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு போதுமானதல்ல. உரம் விலை உயர்வு, வேலையாட்களுக்கு கூலி வழங்குவதில் நஷ்டம் ஏற்படுகிறது.
நெல் கொள்முதல் செய்வது போல் மக்காசோளத்தையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகள் விருப்பம். விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுபோல், ஒரு சதவீதம் சந்தை வரியை, தமிழக அரசு விதித்தது ஏற்புடையதல்ல.
த.மா.கா., பொதுச் செயலர் யுவராஜா: விவசாயிகளின் அடிமடியில் கைவைக்கும் வகையில், தமிழகத்தில் 40 விதமான வேளாண் விளை பொருட்களுக்கு ஒரு சதவீதம் சந்தை வரி விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மக்காசோளத்திற்கு, 'செஸ்' வரி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும், 23 மாவட்டங்களுக்கு இந்த வரி வசூலிக்க, வேளாண் உற்பத்தி பொருட்கள் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த வரியை, வர்த்தகர்கள் தர வேண்டிய பணத்தில் பிடித்தம் செய்யப்படும் என்பதால், விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும். செஸ் வரி செலுத்த மாலை 5:00 மணிக்கு மேல் அரசு அலுவலகம் சென்றால், அதிகாரிகள் இருப்பதில்லை என்பதால், இரவில் மக்காச்சோளம் லோடு ஏற்றிக் கொண்டு வாகனங்கள் செல்ல முடியவில்லை.
ஒரு நாள் தாமதித்தால் விலை இறங்கி விடும் வாய்ப்பு உள்ளது. இந்த இழப்பை, விவசாயிகளின் தலையில் தான் கட்டுவர். ஒரு சதவீத வரி என, அரசு அறிவித்து விட்டோலே, அது விவசாயிக்கான விலையில் தான் பிடித்துக் கொள்ளப்படுகிறது. வியாபாரிகள், அந்த தொகையை ஒன்றுக்கு இரண்டாக, விவசாயிகளிடம் வசூலிப்பர்.இடைத்தரகரின்றி மக்காச்சோளத்தை கொள்முதல் செய்ய வேண்டும். சந்தை வரியை ரத்து செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன்: மக்காச்சோள விவசாயிகளுக்கு கூடுதல் சுமை தரும் வகையில், சந்தை வரி விதித்தது ஏற்றுக் கொள்ள முடியாது. அரிசி, உளுந்து போன்ற பயறு வகைகளுக்கும் வரி போடப்படுகிறது.
மக்காச்சோளத்திலிருந்து கான்பிளவர் தயாரித்தால் சந்தை வரி விதிக்கலாம். ஆனால், மக்காசோளத்திற்கு சந்தை வரி விதிப்பது முறையல்ல. தமிழக அரசு இந்த வரியை ரத்து செய்ய வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய அணி பொதுச்செயலர் மாசிலாமணி: மக்காச்சோளத்துக்கு ஒரு சதவீத சந்தை வரி, விவசாயிகளுக்கு கூடுதல் சுமையாக இருக்கிறது. சந்தை வரி வியாபாரிகளிடம் மட்டும் தான் வசூலிக்கப்படும். ஆனால், அவர்கள் விவசாயிகளின் தலையில் கட்டிவிடுவர்.
ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் விற்கப்படும்போது, அக்கூடத்தின் பராமரிப்பு செலவுக்காக, ஒரு சதவீதம் வரி பிடிக்கப்பட்டது. வெளியே வியாபாரிகளிடம் மக்காச்சோளத்தை விற்பனை செய்யும் விவசாயிகளிடம், ஒரு சதவீதம் சந்தை வரி வாங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படுவர்.
மக்காச்சோளத்தை லாரிகளில் ஏற்றி ஒழுங்குமுறை கூடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, வண்டி வாடகை போன்ற செலவும் ஏற்படும். ஒழுங்குமுறை கூடம் விடுமுறை என்றால், அங்கு தங்கியிருந்து மறுநாள் விற்பனை செய்யும்போது, இன்னும் கூடுதல் செலவு வியாபாரிகளுக்கு ஏற்படும்.
அவர்களும் அந்த செலவை, விவசாயிகளிடம் இருந்து கறந்து விடுவர். சந்தை வரியை ரத்து செய்வதற்குரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த, கட்சியின் மாநில நிர்வாகக் குழுவை கூட்டி முடிவு எடுப்போம்.
தமிழக விவசாயிகள் கட்சி தலைவர் ராமராஜன்: மக்காச்சோளம் உள்ளிட்ட, 40 வகையான விவசாயப் பொருட்கள் மீது, ஒரு சதவீதம் 'செஸ்' வரி விதித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது. தமிழகத்தில் விவசாயிகள், மக்காச்சோளத்தை அதிக அளவில் உற்பத்திச் செய்து வருகின்றனர். அரசு இதை அறிந்தும், வரி விதித்திருப்பது வியாபாரிகளுக்கு ஆதரவான போக்கை காட்டுகிறது.
செஸ் வரியால் வியாபாரிகள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையில், ஒரு சதவீத தொகையை வரியாக பிடித்தம் செய்து கொள்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 25 முதல் 50 காசு வரை நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு எதிரான 'செஸ்' வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.