ADDED : ஜூலை 15, 2024 03:47 AM

சென்னை: வேலைநிறுத்த நோட்டீஸ் அனுப்பிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கு, 24ம் தேதி சமரச பேச்சு நடத்த வரும்படி, தொழிலாளர் நல ஆணையத்தின் இணை கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம், இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிந்தும், புதிய ஒப்பந்தம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும்; ஓய்வூதியர்களின், 103 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
பணியின் போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க வேண்டும் என, போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அரசை வலியுறுத்தி உள்ளன. அரசு கண்டு கொள்ளாததால், போராட்டத்தில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன; முறைப்படி நோட்டீசும் அளித்துள்ளன.
இந்நிலையில், சமரச பேச்சு நடத்த, வரும் 24ம் தேதி பிற்பகல் 4:00 மணிக்கு, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் அலுவலகத்திற்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு, தொழிலாளர் நல ஆணையத்தின் இணை கமிஷனர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஏற்கனவே, கடந்தாண்டு டிச., 27, இந்தாண்டு ஜன., 3, 8, 19; பிப்., 7, 21, மார்ச் 6 ஆகிய தேதிகளில் சமரச பேச்சு நடந்தும், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.