110 விதியில் அறிவிப்பாரா முதல்வர்? பெரும் எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்
110 விதியில் அறிவிப்பாரா முதல்வர்? பெரும் எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்
ADDED : மார் 14, 2025 09:07 PM
அரசு ஊழியர்கள், ஆசிரியர்குளுக்கான ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், அடுத்தாண்டு, ஏப்., முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, ஏற்க முடியாது. கடந்த 2020ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட இதை, வரும் ஏப்., 1 முதலே அமல்படுத்த வேண்டும்.
அதேபோல், பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்பார்த்த எங்களுக்கு, அரசு ஏமாற்றத்தையே தந்துள்ளது.
நேற்று முன்தினம், ஜாக்டோ - ஜியோ ஒருங்கணைப்பாளர்களை, முதல்வர் அழைத்து பேசியபோது, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என, உறுதி அளித்தார். 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவார் என காத்திருக்கிறோம்.
- ச.செல்லையா,
மாநில பொதுச்செயலர், தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணி
பட்ஜெட்டில், பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்த்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. மத்திய அரசு பணிக்கொடை வழங்கும் நிலையில், பட்ஜெட்டில் அதுபற்றி ஏதும் இல்லை. ஈட்டிய விடுப்பு, 2026 ஏப்ரல் முதல் அமலாகும் என்பதும் ஏமாற்றமே. பலமுறை நாங்கள் வலியுறுத்திய நிலையில், முதல்வரே தலையிட்டு, அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், முற்றிலும் கட்டணமில்லா சிகிச்சைக்கான அறிவிப்பும் இல்லை. இந்த விஷயங்களில், முதல்வரை, சில அதிகாரிகள் தவறாக வழிநடத்துவதாக சந்தேகிக்கிறோம். மேலும், இந்த பட்ஜெட், அரசுக்கு அவப்பெயரையும், ஊழியர்களுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
- பேட்ரிக் ரெய்மாண்ட்,
பொதுச்செயலர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம் அடுத்தாண்டு வழங்கப்படும் என்ற அறிவிப்பும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாததும் ஏமாற்றம் அளிக்கின்றன. இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம், 12,000 பகுதி நேர சிறப்பாசிரியர்கள், துாய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி பற்றிய அறிவிப்பும் இல்லை. இவற்றை 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிக்க வேண்டும்.
- சா.அருணன்
நிறுவனத் தலைவர்,
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு