கூட்டுறவு நிலுவை கடன் வசூல் திட்டம் 9 சதவீத வட்டி 6 ஆக குறைக்கப்படுமா?
கூட்டுறவு நிலுவை கடன் வசூல் திட்டம் 9 சதவீத வட்டி 6 ஆக குறைக்கப்படுமா?
ADDED : பிப் 24, 2025 02:21 AM
சென்னை: கூட்டுறவு வங்கிகளில், நீண்ட கால கடனை வசூலிக்கும் சிறப்பு திட்டத்திற்கு, கடன்தாரர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை.
எனவே, இத்திட்டத்தில் நிலுவை கடனுக்கு வசூலிக்கப்படும் 9 சதவீத வட்டியை, 6 சதவீதமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துஉள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்களில், பண்ணைசாரா பிரிவில் வீட்டுக்கடன், சிறு வணிக கடன் உள்ளிட்ட பிரிவில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
கடன் வாங்கிய பலர், பல ஆண்டுகளாக வட்டியும், அசலும் செலுத்தவில்லை. அவர்கள் வழங்கிய சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் வங்கிகளில் உள்ளன.
எனவே, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க, கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர கட்டணங்கள் போன்றவற்றை தள்ளுபடி செய்யும் சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை, 2023 டிசம்பரில் கூட்டுறவு துறை துவக்கியது.
இந்த தள்ளுபடி திட்டம், 2022 டிசம்பர் வரை, நிலுவையில் உள்ள கடன்களுக்கு பொருந்தும். கடன்தாரர்கள், நிலுவை கடனுக்கான அசல் மற்றும் 9 சதவீத வட்டியை செலுத்தி கடனை அடைக்கலாம்.
இத்திட்டத்தில், 4.73 லட்சம் கடன்தாரர்கள் வாயிலாக, 1,500 கோடி ரூபாய் வசூலாகும் என, மதிப்பிடப்பட்டது. அதற்காக திட்டத்தில் இணைவதற்கான அவகாசம், பல முறை நீட்டிக்கப்பட்டு, வரும் மார்ச்சில் முடிவடைகிறது.
இதுவரை, 250 கோடி ரூபாய் கூட வசூலாகவில்லை. பெரும்பாலானோர் 9 சதவீத வட்டி, 6 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடன்தாரர்கள், சிறப்பு திட்டத்தில், 9 சதவீத வட்டி அதிகமாக இருப்பதாகவும், அதை குறைக்குமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
'அதற்கேற்ப வட்டியை 6 சதவீதமாக குறைத்தால், நிலுவை கடனை அடைக்க பலர் முன்வரலாம். இதை, அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.